விலையில்லா ஆடுகள் வழங்கும் திட்டம்: பயனாளிகளை தேர்வு செய்ய சிறப்பு கிராமசபை கூட்டம்

நாமக்கல் மாவட்டத்தில் விலையில்லா செம்மறி, வெள்ளாடுகள் வழங்க பயனாளிகள் தேர்வு செய்ய சிறப்பு கிராமசபை கூட்டம் 2 நாட்கள் நடைபெற உள்ளது.
விலையில்லா ஆடுகள் வழங்கும் திட்டம்: பயனாளிகளை தேர்வு செய்ய சிறப்பு கிராமசபை கூட்டம்
Published on

2 நாட்கள் நடக்கிறது

நாமக்கல்,

இதுகுறித்து நாமக்கல் கலெக்டர் ஆசியா மரியம் வெளியிட்டுள்ள செய்திகுறிப்பில் கூறியிருப்பதாவது:-

தமிழக முதல்-அமைச்சரின் விலையில்லா வெள்ளாடு மற்றும் செம்மறியாடுகள் வழங்கும் திட்டத்தின் மூலம் 2018-ம் ஆண்டு அக்டோபர் மாதம் முதல் நாமக்கல் மாவட்டத்தில் விலையில்லா வெள்ளாடு, செம்மறி ஆடுகள் வழங்கும் திட்டம் செயல்படுத்தப்பட்டு வருகிறது. ஆண்டு குறியீட்டை எய்துவதற்காக சிவியாம்பாளையம், ஒருவந்தூர், குப்பாண்டம் பாளையம், மங்களம் ஆகிய 4 கிராமங்களில் நாளை மறுநாளும் (திங்கட்கிழமை), வருகிற 7-ந் தேதியும் சிறப்பு கிராமசபை கூட்டங்கள் நடத்தப்பட்டு பயனாளிகள் தேர்வு இறுதி செய்யப்படும். கிராம ஊராட்சியில் கிராம சபை மூலம் தேர்வு செய்யப்படும் தகுதி உள்ள பயனாளிகளுக்கு ஆண்டு குறியீட்டிற்கு மிகாமல் வெள்ளாடு, செம்மறியாடுகள் கிடைக்கும் வகையில் இலக்கு நிர்ணயித்து திட்டம் செயல்படுத்தப்பட உள்ளது.

இத்திட்டத்தில் பயனடைய பயனாளிகள் அனைவரும் பெண்களாக இருக்கவேண்டும். ஏழ்மையிலும் ஏழ்மையான பெண்கள், நிலமில்லா விவசாய தொழிலாளி மற்றும் சம்மந்தப்பட்ட கிராமத்தில் நிரந்தரமாக வசிப்பவராகவும், தற்சமயம் பசு மற்றும் வெள்ளாடு, செம்மறியாடு இல்லாதவராகவும் இருக்க வேண்டும். மத்திய, மாநில அரசு ஊழியராகவும் மற்றும் நிறுவனம், கூட்டுறவுத்துறை ஊழியராகவும், கிராம பஞ்சாயத்து, உள்ளாட்சி உறுப்பினராகவும் இருக்கக்கூடாது. அதேபோல் ஏற்கனவே இலவச கறவை பசுக்கள், வெள்ளாடு, செம்மறியாடு வழங்கும் திட்டத்தில் பயனடைந்தவராகவும் இருக்கக்கூடாது.

இதில் பெண்களின் சிறப்பு பிரிவினரான விதவைகள், கணவரால் கைவிடப்பட்டோர், மாற்றுத்திறனாளிகள், திருநங்கைகள் ஆகியோர்களுக்கு முன்உரிமை அளிக்கப்படும். எனவே மேற்கண்ட தேதிகளில் நடைபெறும் சிறப்பு கிராமசபை கூட்டங்களில், திட்டத்தில் பயனடைய விரும்புவோர் கலந்துகொண்டு விண்ணப்பத்தினை அளித்து பயனடையுமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.

இவ்வாறு அதில் கூறப்பட்டு உள்ளது.

Related Stories

No stories found.
X

Daily Thanthi
www.dailythanthi.com