மக்களை ஏமாற்றிய மோடி மீண்டும் பிரதமராக முடியாது நல்லகண்ணு பேட்டி

மக்களை ஏமாற்றிய மோடி மீண்டும் பிரதமராக முடியாது என்று நல்லகண்ணு கூறினார்.
Published on

கன்னியாகுமரி,

உலக திருக்குறள் கூட்டமைப்பு சார்பில் திருவள்ளுவரின் பிறந்த நாளையொட்டி திருக்குறள் மாநாடு கன்னியாகுமரி விவேகானந்தா கேந்திராவில் உள்ள ஏக்நாத் அரங்கில் நேற்று தொடங்கியது. உலக தமிழர் பேரமைப்பு தலைவர் பழ.நெடுமாறன், இந்திய கம்யூனிஸ்டு கட்சி மூத்த தலைவர் நல்லகண்ணு, காங்கிரஸ் மூத்த தலைவர் குமரி அனந்தன், கோவை பேரூர் ஆதீனம் சாந்தலிங்க மருதாசல அடிகளார், கோவை திருவை ஆதீனம் குமரகுருபர அடிகளார், குமரி மாவட்ட வரலாற்று பண்பாட்டு ஆய்வு மைய பொதுச் செயலாளர் எஸ்.பத்மநாபன், உலக திருக்குறள் கூட்டமைப்பு தலைவர் சேகர் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

மாநாட்டையொட்டி திருக்குறள் அமைப்பின் ஒருங்கிணைப்பு பேரணி நடந்தது. இதில் வெளிநாடுகளில் இருந்தும், வெளி மாவட்டங்களில் இருந்தும் ஏராளமானவர்கள் கலந்து கொண்டனர். பேரணியை குமரி அனந்தன் தொடங்கி வைத்தார்.

முன்னதாக நல்லகண்ணு நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-

மத்தியில் பாரதீய ஜனதாவின் 5 ஆண்டுகால ஆட்சியில் எந்த ஒரு மக்கள் நலத்திட்டங்களும் நிறைவேற்றப்படவில்லை. மக்களை பாரதீய ஜனதா ஏமாற்றிவிட்டது. எனவே மோடி மீண்டும் பிரதமராக வரமுடியாது. அவர் பிரதமராக வரக்கூடாது என்று தமிழக மக்கள் முடிவு எடுத்துவிட்டனர். வருகிற 23-ந் தேதி ஓட்டு எண்ணிக்கையின் போது அது தெரியவரும்.

தமிழ்நாட்டு மக்களைப் போலவே அனைத்து மாநில மக்களும் மோடி பிரதமராக வரக்கூடாது என்ற இதே முடிவை எடுத்து உள்ளனர். எனவே மத்தியில் ஆட்சி மாற்றம் வரும். மத்தியில் எங்கள் கூட்டணி கட்சிகள்தான் ஆட்சியை பிடிக்கும். எங்கள் கூட்டணி நிச்சயம் வெற்றி பெறும். 3-வது அணி தொடர்பாக சந்திரசேகர ராவ் சுற்றுப்பயணம் செய்வது அவரது முயற்சி. அது பற்றி கருத்துகூற விரும்பவில்லை.

பல ஆண்டுகளாக அரசு குடியிருப்பில் குடியிருந்தவர்களை திடீரென்று வெளியேற்றி விட்டார்கள். காமராஜர் ஆட்சி காலத்தில் பல துறைகளின் மந்திரியாக இருந்தவர் கக்கன். தியாகி கக்கன் குடும்பத்தினரும் அங்கிருந்து வெளியேற்றப்பட்டுள்ளனர். எம்.ஜி.ஆர். ஆட்சி காலத்தில் கக்கனுக்கு வாடகை இல்லாத வீடாக அந்த வீட்டை ஒதுக்கீடு செய்தார். அவர்களுக்கு மாற்று இடம் கொடுத்துவிட்டு வெளியேற்றி இருக்கலாம்.

தேர்தலின் போது தேர்தல் கமிஷன் கூறும் தொகையை விட வேட்பாளர்கள் அதிக செலவு செய்கிறார்கள். இதை தடுக்க வேட்பாளர்களின் தேர்தல் செலவுகளை அரசே ஏற்கவேண்டும். தமிழகத்தில் தற்போது அ.தி.மு.க. ஆட்சி நடக்கவில்லை. பாரதீய ஜனதா ஆட்சிதான் நடக்கிறது. பாரதீய ஜனதாவின் கைப்பாவையாக அ.தி.மு.க. மாறிவிட்டது.

நாடாளுமன்ற தேர்தல் ஓட்டுப்பதிவு முடியும் நேரத்தில் தமிழகத்தில் ஹைட்ரோகார்பன் மீத்தேன் திட்டங்களுக்கு அனுமதி கொடுத்து உள்ளது. மிகப்பெரிய கண்டனத்திற்குரியது. 12 மாவட்டங்களை சேர்ந்த 28 லட்சம் ஏக்கர் விவசாய நிலங்களும், 9 மாவட்டங்களின் குடிநீர் திட்டங்களும் இதனால் பாதிக்கப்படும். எனவே அதை ரத்து செய்ய வேண்டும். குமரி மாவட்டத்தில் மீனவர்களின் வாழ்வாதாரத்தை, மீன் வளத்தை பாதிக்கும் துறைமுக திட்டத்தை கைவிட வேண்டும்.

இவ்வாறு நல்லகண்ணு கூறினார்.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com