

சென்னை,
ஆடிப்பெருக்கு விழா நாளை மறுதினம் (சனிக் கிழமை) கொண்டாடப்படுகிறது. இதை முன்னிட்டு சென்னை அடையாறில் உள்ள எம்.ஜி.ஆர். ஜானகி மகளிர் கல்லூரி மாணவிகள் கோலாகலமாக நேற்று இந்த விழாவை கொண்டாடினார்கள்.
இதற்காக மாணவிகள் தமிழர்களின் பாரம்பரிய உடைகளான சேலை, பாவாடை தாவணி அணிந்து வந்து அசத்தினர். கல்லூரி வளாகத்தில் பல்வேறு நிகழ்ச்சிகளும் ஏற்பாடு செய்யப்பட்டு இருந்தன.
முன்னதாக ஆடிப்பெருக்கு விழாவை முன்னிட்டு, கல்லூரி வளாகத்தில் அமைக்கப்பட்டு இருந்த சிறிய தண்ணீர் தொட்டியில் மாணவிகள் விளக்குகளை மிதக்கவிட்டனர். பல்வேறு வகை சாதங்கள் அடங்கிய சித்ரா அன்னத்தை ஒருவருக்கொருவர் கொடுத்து மகிழ்ச்சியை வெளிப்படுத்தினார்கள்.
கிராமத்தில் நடைபெறும் திருவிழாக்களில் அமைக்கப்படும் கடைகள் போல ஏராளமான தின்பண்ட கடைகள் கல்லூரி வளாகத்தில் மாணவிகள் அமைத்து இருந்தனர். கம்மங்கூழ், கேப்பங்கூழ், ஐஸ், வளையல் கடை உள்பட பல கடைகள் அமைக்கப்பட்டு இருந்தன.
அம்மனுக்கு உகந்தது ஆடி மாதம் என்பதால், மாணவிகள் பலர் அம்மன் வேடமிட்டு பக்தி பரவசத்துடன் காட்சியளித்தனர். மேலும், கரகாட்டம், ஒயிலாட்டம், தப்பாட்டம், கோலாட்டம் உள்ளிட்ட கிராமிய நடனங்களையும் மாணவிகள் அரங்கேற்றி ஆடிப்பெருக்கு விழாவை ஆனந்தத்தோடு கொண்டாடினார்கள்.
இதுகுறித்து எம்.ஜி.ஆர். ஜானகி கல்லூரி முதல்வர் ஆர்.மணிமேகலை கூறுகையில், நம்முடைய பாரம்பரியம், கலாசாரத்தை பாதுகாப்பதுடன் அதை பற்றி அனைவரும் தெரிந்துகொள்ள வேண்டும். தமிழர்களுக்கு பெருமை சேர்க்கும் நமது கலாசாரத்தின் மகத்துவத்தை அடுத்த தலைமுறையினருக்கு இதுபோன்ற விழாக்கள் மூலமாக எடுத்து செல்கிறோம் என்றார்.