தூய்மை இந்தியா திட்டத்தின் பலனாக சென்னை திறந்தவெளி கழிப்பிடங்கள் இல்லாத மாநகராக மாறுமா?

தமிழ்நாட்டின் தலைநகரான சென்னை, பெருநகர மாநகராட்சி என்ற சிறப்புமிகு அந்தஸ்துடன் திகழ்ந்தாலும், திறந்தவெளியை கழிப்பிடமாக பயன்படுத்தும் அவலநிலை இன்றளவும் ஒரு சில பகுதிகளில் நீடிக்கிறது. சாலை ஓரங்களில் சிறுநீர் கழிப்பதை தடுக்க சுவர்களில் கடவுள் சித்திரங்களை வரையும் நிலைமை இருக்கிறது.
Published on

தூய்மை இந்தியா திட்டம்

சென்னையில் பெருநகர மாநகராட்சி சார்பில் இலவச கழிப்பிடங்கள், கட்டண கழிப்பிடங்கள், நவீன கழிப்பிடங்கள் (இ-டாய்லெட், நம்ம டாய்லெட்) என 2 ஆயிரத்து 500-க்கும் மேற்பட்ட கழிப்பிடங்கள் பயன்பாட்டில் உள்ளன.

பிரதமர் நரேந்திர மோடி கடந்த 2014-ம் ஆண்டு தொடங்கிய தூய்மை இந்தியா திட்டத்தின் கீழ் சென்னையில் பல்வேறு இடங்களில் 1,077 பொது கழிப்பறைகள் கட்டி கொடுக்கப்பட்டுள்ளன.

90 இடங்களில் பொது கழிப்பறை கட்டும் பணிகளும், 253 இடங்களில் கட்டி கொடுப்பதற்கான நடவடிக்கைகளும் மேற்கொள்ளப்பட்டு உள்ளன. கழிப்பறை வசதி இல்லாத வீடுகளுக்கும் தூய்மை இந்தியா திட்டத்தின் கீழ் இலவச கழிப்பறைகள் கட்டி கொடுக்கப்பட்டு வருகிறது. அதனடிப்படையில் தற்போது சென்னையில் 6 ஆயிரத்து 890 வீடுகளுக்கு தனிநபர் கழிப்பறைகள் கிடைத்துள்ளது.

சமூக ஆர்வலர்கள் எதிர்பார்ப்பு

தங்கள் வீடுகளில் கழிப்பறை கட்ட வசதி இல்லாத அடிதட்டு, பாமர மக்கள் திறந்தவெளியையும், ரெயில்வே தண்டவாள பாதைகளையும் திறந்தவெளி கழிப்பிடமாக பயன்படுத்துவதை காண முடிகிறது.

இந்த மக்களிடம் தூய்மை இந்தியா திட்டத்தின் கீழ் நீங்கள் ஏன் இலவசமாக கழிப்பிடங்கள் கட்டிக் கொள்ள முன் வரவில்லை? என்று கேட்டால், இப்படி ஒரு திட்டம் இருப்பது தங்களுக்கு தெரியவே தெரியாது என்றே தெரிவிக்கின்றனர்.

இது தூய்மை இந்தியா திட்டம் பற்றி மக்களிடம் போதிய விழிப்புணர்வு இல்லை என்பதையே காட்டுகிறது.

எனவே திறந்தவெளியை கழிப்பிடமாக பயன்படுத்துவதால் ஏற்படும் சுகாதார சீர்கேடுகள், உடல்நல பாதிப்புகள் குறித்தும், கழிப்பிடங்களை பயன்படுத்துவதன் அவசியம் குறித்தும் மக்களிடையே தீவிர விழிப்புணர்வு பிரசாரம் மேற்கொள்ள வேண்டியது சுகாதாரத்துறையின் மிக முக்கிய கடமையாகும். இதன் மூலம் தூய்மை இந்தியா திட்டத்தின் பலனாக சென்னை திறந்தவெளி கழிப்பிடங்கள் இல்லாத மாநகராக மலர வேண்டும் என்பதே சுற்றுச்சூழல் ஆர்வலர்களின் மிகுந்த எதிர்பார்ப்பாக உள்ளது.

திறந்தவெளியை கழிப்பிடமாக பயன்படுத்தினால் அபராதம்

மாநகராட்சி கமிஷனர் கார்த்திகேயன் எச்சரிக்கை

சென்னையில் தூய்மை இந்தியா திட்டம் செயல்பாடு குறித்து, மாநகராட்சி கமிஷனர் த.கார்த்திக்கேயனிடம் கேட்கப்பட்ட கேள்விகளும், அவர் அளித்த பதில்களும் வருமாறு:-

கேள்வி:- பெருநகர சென்னை மாநகராட்சியில் தூய்மை இந்தியா திட்டத்தின் கீழ் எத்தனை கழிப்பறைகள் கட்டப்பட்டுள்ளன? எந்தெந்தப் பகுதிகளில் கட்டப்பட்டுள்ளன?

பதில்:- வடக்கு மண்டலத்தில் 71, மத்திய மண்டலத்தில் 136, கிழக்கு மண்டலத்தில் 130 என ஆயிரத்து 77 இருக்கைகள் கொண்ட 337 கழிப்பிடங்கள் கட்டப்பட்டுள்ளன.

கேள்வி:- இந்த கழிப்பறைகள் எந்த வகையில் பாராமரிக்கப்படுகின்றன? எவ்வாறு தண்ணீர் வசதி அளிக்கப்படுகிறது?

பதில்:- ஆழ்துளைக் கிணறுகள் மூலம் 100 சதவீதம் தண்ணீர் வசதி செய்து தரப்படுகிறது. காலையிலும் மாலையிலும் துப்புறவுப் பணியாளர்கள் மூலம் கிருமி நாசினி தெளிக்கப்படுகிறது. மேலும், 2 மணிநேரத்துக்கு ஒருமுறை ஒவ்வொரு கழிப்பறையும் தண்ணீர் மூலம் சுத்தமாக்கப்படுகிறது.

ரூ.4.66 கோடி செலவு

கேள்வி:- இந்த கழிப்பறைகள் அனைத்தும் இலவசமாக பயன்பாட்டுக்கு அனுமதிக்கப்படுகின்றன என்பது உறுதி செய்யப்பட்டுள்ளதா?

பதில்:- ஆம், உறுதி செய்யப்பட்டுள்ளது.

கேள்வி:- பெருநகர சென்னை மாநகராட்சியில் இன்னும் எத்தனை இடங்களில் கழிப்பறைகள் கட்டப்படவுள்ளன?

பதில்:- 21 இடங்களில் 498 இருக்கைகள் கொண்ட பொதுக்கழிப்பிடங்கள் கட்டப்பட உள்ளன.

கேள்வி:- தூய்மை இந்தியா திட்டத்தின் கீழ் எத்தனை வீடுகளில் தனிநபர் கழிப்பறைகள் கட்டப்பட்டுள்ளன? இந்த கழிப்பறைகள் கட்ட அரசு எவ்வளவு நிதி உதவி அளிக்கும்? அந்த வீட்டு உரிமையாளரின் பங்களிப்புத் தொகை எவ்வளவு?

பதில்:- சென்னையில் வடக்கு மண்டலத்தில் 3,396, மத்திய மண்டலத்தில் 1,210, கிழக்கு மண்டலத்தில் 2,224 என 6,890 தனிநபர் கழிப்பிடங்கள் பயன்பாட்டுக்கு கொண்டு வரப்பட்டுள்ளன. இந்தப் பணிக்காக மத்திய அரசின் பங்காக ரூ.6.93 கோடியும், தமிழக அரசின் பங்காக ரூ.80 லட்சமும் என மொத்த ரூ.7.73 கோடி ஒதுக்கப்பட்டுள்ளது. இதுவரை ரூ.4.66 கோடி செலவழிக்கப்பட்டுள்ளது. மொத்தம் 7 ஆயிரத்து 73 தனிநபர் கழிப்பிடங்களை கட்ட இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

தனிநபர் கழிப்பறைகளை அமைக்கும்போது, மாநகராட்சி சார்பில் அந்த வீட்டின் உரிமையாளருக்கு ரூ.8 ஆயிரம் வழங்கப்படுகிறது. இந்தத் தொகைக்குள்ளே சிலர் கழிப்பிடத்தை அமைத்துக்கொள்கின்றனர். பலர் அவர்களால் முடிந்த அளவு கூடுதலாக செலவு செய்து கழிப்பிடங்களை அமைத்துக்கொள்கின்றனர்.

அபராதம்

கேள்வி:- திறந்தவெளியை கழிப்பிடமாக பயன்படுத்தும் நிலை முழுமையாக நமது மாநகராட்சியில் எப்போது அகற்றப்படும்?

பதில்:- திறந்தவெளியை கழிப்பிடமாக பயன்படுத்தும் நிலை பெருநகர சென்னை மாநகராட்சியில் முழுமையாக தடை செய்யப்பட்டுள்ளது. பொது இடங்களில் அசுத்தம் செய்வது, சிறுநீர் கழிப்பது, திறந்தவெளியை கழிப்பிடமாக பயன்படுத்துவது போன்ற செயல்களுக்கு, திடக்கழிவு மேலாண்மை துறை விதிகளின் கீழ் அபராதம் விதிக்கப்படும்.

இவ்வாறு அவர் கூறினார்.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com