சென்னை மற்றும் புறநகர் பகுதியில் வாக்குப்பதிவு எந்திரம் பழுதால் பொதுமக்கள் அவதி

சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் வாக்குப்பதிவு எந்திரங்களில் ஏற்பட்ட பழுதால் ஓட்டுப்போட வந்த பொதுமக்கள் நீண்டநேரம் காத்திருந்ததால் கடும் அவதி அடைந்தனர்.
Published on

ஆலந்தூர்,

சென்னையை அடுத்த ஆலந்தூர் ஏ.ஜெ.எஸ். நிதிப்பள்ளியில் ஸ்ரீபெரும்புதூர் நாடாளுமன்ற தொகுதிக்கு உட்பட்ட 2 வாக்குப்பதிவு எந்திரங்களில் திடீரென பழுது ஏற்பட்டது. உடனடியாக அதிகாரிகள், எந்திரங்களில் ஏற்பட்ட பழுதை சரி செய்தனர். இதனால் ஒரு மணி நேரம் ஓட்டுப்பதிவு பாதிக்கப்பட்டது.

ஆதம்பாக்கத்தில் உள்ள பள்ளியில் வாக்குப்பதிவு எந்திரம் பழுதானதால், சுமார் 1 மணிநேரம் தாமதம் ஆனது. மேலும் ஆதம்பாக்கத்தில் உள்ள தனியார் பள்ளியில் சுமார் ஒரு மணி நேரம் தாமதமாக ஓட்டுப்பதிவு தொடங்கினாலும், 220 ஓட்டுகள் பதிவானபோது திடீரென எந்திரத்தில் கோளாறு ஏற்பட்டது. இதனால் சுமார் ஒரு மணி நேரம் வாக்குப் பதிவு நிறுத்தி வைக்கப்பட்டு மாற்று ஏற்பாடு செய்யப்பட்டன.

நங்கநல்லூரில் உள்ள தனியார் பள்ளியில் 2 வாக்குப் பதிவு எந்திரங்கள் பழுதடைந்ததால் சுமார் 2 மணி நேரமாக தாமதமாக ஓட்டுப்பதிவு தொடங்கியது. தென்சென்னை நாடாளுமன்ற தொகுதிக்கு உட்பட்ட உள்ளகரம் பஞ்சாயத்து பள்ளியில் 2 வாக்குப்பதிவு எந்திரங்கள் பழுதடைந்தன. இதனால் 2 மணி நேர தாமதத்துக்கு பின் ஓட்டுப்பதிவு தொடங்கியது.

ஆலந்தூர், நங்கநல்லூர், ஆதம்பாக்கம் போன்ற பகுதிகளில் வாக்காளர்களுக்கு தேர்தல் ஆணையத்தின் சார்பில் பூத் சிலிப் சரியாக வழங்கப்படாததால் பொதுமக்கள் உரிய வாக்குச்சாவடி மையம் தெரியாமல் அலைந்தனர். மேலும் வாக்குப்பதிவு எந்திரம் கோளாறு ஏற்பட்டதால் நீண்டநேரம் காத்து கிடந்ததாலும் அவதி அடைந்தனர்.

எண்ணூர் 1-வது வார்டுக்கு உட்பட்ட சென்னை மாநகராட்சி நடுநிலைப்பள்ளியில் நெட்டுக்குப்பம் பாகம் 69-ல் 1 மணி முதல் 3 மணி வரை வாக்குப்பதிவு எந்திரத்தில் பழுது ஏற்பட்டதால் ஓட்டுபோட முடியாமல் நீண்ட வரிசையில் பெண்கள் காத்திருந்தார்கள்.

பின்னர் அதிகாரிகள் வந்து எந்திரத்தை சரிசெய்தனர். அதன்பிறகு மீண்டும் 3.30 மணியளவில் வாக்குப்பதிவு தொடங்கியது.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com