3-ம் மண்டல பாசனத்திற்கு திருமூர்த்தி அணையில் இருந்து 11-ந்தேதி தண்ணீர் திறப்பு - விவசாயிகள் மகிழ்ச்சி

உடுமலையை அடுத்த திருமூர்த்தி அணையில் இருந்து வருகின்ற 11-ந்தேதி 3-ம் மண்டல பாசனத்திற்கு தண்ணீர் திறந்து விடப்பட உள்ளதாக அதிகாரிகள் தெரிவித்து உள்ளனர். இதனால் விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.
3-ம் மண்டல பாசனத்திற்கு திருமூர்த்தி அணையில் இருந்து 11-ந்தேதி தண்ணீர் திறப்பு - விவசாயிகள் மகிழ்ச்சி
Published on

தளி,

உடுமலையை அடுத்த திருமூர்த்தி அணையை ஆதாரமாகக் கொண்டு பி.ஏ.பி. பாசனத்திட்டத்தின் கீழ் 3 லட்சத்து 77 ஆயிரத்து 152 ஏக்கர் நிலங்கள் பாசன வசதி பெற்று வருகிறது. பாசன நிலங்கள் 4 மண்டலங்களாக பிரிக்கப்பட்டு ஆண்டுக்கு 2 மண்டலங்கள் வீதம் சுழற்சி முறையில் தண்ணீர் வினியோகம் நடைபெற்று வருகிறது.

அதுதவிர பெரியகுளம், செட்டிகுளம், செங்குளம், கரிசல்குளம் உள்ளிட்ட குளங்கள் மூலமாக 3 ஆயிரத்து 60 ஏக்கர் நிலங்கள் பாசனம் பெறுகிறது. அத்துடன் உடுமலை, கணக்கம்பாளையம், மடத்துக்குளம், குடிமங்கலம் உள்ளிட்ட குடிநீர் திட்டங்கள் மூலம் சுற்றுப்புற கிராமங்களுக்கு குடிநீர் வினியோகம் நடைபெற்று வருகிறது.

இந்த நிலையில் கடந்த ஆண்டு ஆகஸ்டு மாதம் மேற்கு தொடர்ச்சி மலைப்பகுதியில் தென்மேற்கு பருவமழை தீவிரம் அடைந்தது. அதைத் தொடர்ந்து ஆறுகள் மூலமாக பி.ஏ.பி. தொகுப்பு அணைகளுக்கு நீர்வரத்து ஏற்பட்டது. ஆனால் திருமூர்த்தி அணைக்கு நீர்வரத்து ஏற்படவில்லை.

இதையடுத்து காண்டூர் கால்வாய் மூலமாக பி.ஏ.பி. தொகுப்பு அணைகளில் இருந்து திருமூர்த்திஅணைக்கு தண்ணீர் திறந்து விடப்பட்டது.

அதைத்தொடர்ந்து அணையின் நீர் இருப்பு வேகமாக உயர்ந்து வந்தது. இதையடுத்து 2-ம் மண்டல பாசனத்திற்கு தண்ணீர் திறந்து விடப்பட்டது. இதனால் கோவை, திருப்பூர் மாவட்டத்தில் உள்ள சுமார் 96 ஆயிரம் ஏக்கர் நிலங்கள் பாசன வசதி பெற்றது. 4 சுற்றுகளாக வழங்கப்பட்ட தண்ணீர் கடந்த 1-ந் தேதி நிறைவுற்றது. அதைத்தொடர்ந்து 3-ம் மண்டல பாசனத்திற்காக அணையில் தண்ணீர் தேக்கப்பட்டு வந்தது. இதனால் அணையின் நீர்மட்டமும் வேகமாக உயர்ந்து வந்தது.

இதையடுத்து பாசனத்திற்கு தண்ணீர் திறந்து விடுமாறு விவசாயிகள் கோரிக்கை விடுத்து வந்தனர். அதைத் தொடர்ந்து தண்ணீர் திறப்பதற்கான கருத்துருவை அதிகாரிகள் தயாரித்து அரசுக்கு அனுப்பி வைத்தனர். அதன்பேரில் வருகிற 11-ந் தேதி 3-ம் மண்டல பாசனத்திற்கு தண்ணீர் திறந்து விடுவதற்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளதாக அதிகாரிகள் தெரிவித்தனர். இதனால் கோவை, திருப்பூர் மாவட்டங்களில் சுமார் 96 ஆயிரம் ஏக்கர் நிலங்கள் பாசன வசதி பெறுகிறது.மேலும் தண்ணீர் 5 சுற்றுகளாக வழங்கப்பட உள்ளதாக அதிகாரிகள் தெரிவித்தனர். இதனால் விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.

அணையின் மொத்த உயரம் 60 அடி ஆகும். நேற்றைய நிலவரப்படி அணையில் 52.82 அடி உயரத்திற்கு தண்ணீர் உள்ளது. அணைக்கு வினாடிக்கு காண்டூர் கால்வாய் மூலமாக 211 கன அடியும், பாலாற்றின் மூலமாக 66 கன அடியும் தண்ணீர் வந்து கொண்டுள்ளது. அணையில் இருந்து வினாடிக்கு 79 கனஅடி தண்ணீர் வெளியேற்றப்படுகிறது.

Related Stories

No stories found.
X

Daily Thanthi
www.dailythanthi.com