கர்நாடகாவில் 13,900 கனஅடி தண்ணீர் திறப்பு ஒகேனக்கல்லுக்கு நீர்வரத்து 9,500 கனஅடியாக அதிகரிப்பு

காவிரி நீர்ப்பிடிப்பு பகுதிகளில் தொடர்ந்து மழை பெய்து வருவதால் ஒகேனக்கல்லுக்கு நீர்வரத்து வினாடிக்கு 9,500 கனஅடியாக அதிகரித்துள்ளது. மேலும் நேற்று கர்நாடகா அணைகளில் இருந்து வினாடிக்கு 13 ஆயிரத்து 900 கனஅடி தண்ணீர் திறந்து விடப்பட்டுள்ளது.
கர்நாடகாவில் 13,900 கனஅடி தண்ணீர் திறப்பு ஒகேனக்கல்லுக்கு நீர்வரத்து 9,500 கனஅடியாக அதிகரிப்பு
Published on

பென்னாகரம்,

கர்நாடக மாநில காவிரி நீர்ப்பிடிப்பு பகுதிகள் மற்றும் கேரள மாநிலம் வயநாடு உள்ளிட்ட பகுதிகளில் தொடர் மழை பெய்து வருகிறது. இதனால் கிருஷ்ணராஜ சாகர், கபினி அணைகள் நிரம்பி வருகின்றன. இதன் காரணமாக 2 அணைகளில் இருந்தும் காவிரி ஆற்றில் தண்ணீர் தமிழகத்திற்கு திறந்து விடப்பட்டுள்ளது. நேற்று கர்நாடக அணைகளில் இருந்து காவிரியில் வினாடிக்கு 13 ஆயிரத்து 900 கனஅடி நீர் திறக்கப்பட்டுள்ளது.

இதனிடையே நேற்று முன்தினம் தர்மபுரி மாவட்டம் ஒகேனக்கல்லுக்கு வினாடிக்கு 8,400 கனஅடி தண்ணீர் வந்து கொண்டு இருந்தது. இந்த நீர்வரத்து நேற்று படிப்படியாக அதிகரிக்க தொடங்கியது. நேற்று காலை 6 மணி நிலவரப்படி வினாடிக்கு 8,600 கனஅடி தண்ணீர் வந்தது. இந்த நீர்வரத்து மேலும் அதிகரித்து மாலை 6 மணி நிலவரப்படி வினாடிக்கு 9,500 கனஅடி தண்ணீர் வந்து கொண்டு இருந்தது. இதனால் ஒகேனக்கல் மெயின் அருவி, ஐந்தருவி, சினிபால்ஸ் உள்ளிட்ட அருவிகளில் தண்ணீர் ஆர்ப்பரித்து கொட்டுகிறது.

காவிரி ஆற்றில் வரும் தண்ணீரின் அளவை கர்நாடக-தமிழக எல்லையான பிலிகுண்டுலுவில் மத்திய நீர்வளத்துறை அதிகாரிகள் அளவீடு செய்து தீவிரமாக கண்காணித்து வருகின்றனர். ஒகேனக்கல்லுக்கு நீர்வரத்து தொடர்ந்து அதிகரித்துள்ளால் பரிசல் இயக்க விதிக்கப்பட்ட தடை நேற்று 5-வது நாளாக நீடித்தது.

கர்நாடக அணைகளில் இருந்து வினாடிக்கு 13 ஆயிரம் கனஅடிக்கு மேல் தண்ணீர் திறந்து விடப்பட்டுள்ளதால் ஒகேனக்கல்லுக்கு நீர் வரத்து மேலும் அதிகரிக்க வாய்ப்பு உள்ளதாக மத்திய நீர்வளத்துறை அதிகாரிகள் தெரிவித்தனர்.

இதனிடையே நேற்று ஒகேனக்கல்லுக்கு ஏராளமான சுற்றுலா பயணிகள் வந்தனர். அவர்கள் காவிரி ஆற்றில் பெருக்கெடுத்து ஓடும் தண்ணீர் மற்றும் அருவிகளில் ஆர்ப்பரித்து கொட்டும் தண்ணீரை கண்டு ரசித்தனர். ஆனால் பரிசல் இயக்க தடை விதிக்கப்பட்டுள்ளதால் சுற்றுலா பயணிகள் ஏமாற்றத்துடன் திரும்பி சென்றனர். காவிரி ஆற்றில் நீர்வரத்து அதிகரித்துள்ளதால் போலீசார், ஊர்க்காவல் படையினர் தீவிர ரோந்து சென்று கண்காணித்தனர்.

இன்று (ஞாயிற்றுக்கிழமை) விடுமுறை நாள் என்பதால் ஒகேனக்கல்லுக்கு அதிக அளவில் சுற்றுலா பயணிகள் வருவார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இதனால் கூடுதலாக போலீசாரை பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்த மாவட்ட நிர்வாகம் நடவடிக்கை மேற்கொண்டு வருகிறது.

மேட்டூர் அணைக்கு நேற்றுமுன்தினம் வினாடிக்கு 7 ஆயிரத்து 200 கனஅடி வீதம் தண்ணீர் வந்து கொண்டிருந்தது. இதே அளவு தண்ணீரே நேற்றும் வந்தது. மேலும் வினாடிக்கு 1,000 கனஅடி வீதம் தண்ணீர் திறந்து விடப்பட்டது. நேற்று முன்தினம் 42.14 அடியாக இருந்த நீர்மட்டம் நேற்று 43.11 அடியாக உயர்ந்தது. மேட்டூர் அணைக்கு தண்ணீர் வரத்து மேலும் அதிகரிக்கும் என்பதால், அணையின் நீர்மட்டம் உயர வாய்ப்பு உள்ளது.

Related Stories

No stories found.
X

Daily Thanthi
www.dailythanthi.com