

மும்பை,
டெல்லியில் ஜவகர்லால் நேரு பல்கலைக்கழக மாணவர்கள் மீது கடந்த மாதம் நடந்த தாக்குதலை கண்டித்து, மும்பையில் உள்ள கேட்வே ஆப் இந்தியாவில் கல்லூரி மாணவர்கள், சமூக ஆர்வலர்கள் உள்பட சுமார் 2 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் திரண்டு போராட்டத்தில் ஈடுபட்டனர். அப்போது, குடியுரிமை திருத்த சட்டத்திற்கு எதிராகவும் கோஷம் எழுப்பினார்கள். போராட்டத்தில் பங்கேற்ற மேஹக் மிஸ்ரா என்ற பெண், தனது கையில் சுதந்திர காஷ்மீர்' என்ற வாசகம் அடங்கிய பதாகையை வைத்து இருந்தது சர்ச்சையை ஏற்படுத்தியது.
இந்த போராட்டத்தின் காரணமாக பொதுமக்கள் மற்றும் சுற்றுலா பயணிகள் பாதிக்கப்பட்டனர்.
17 பேர் கைது
இது தொடர்பாக போலீசார் கேட்வே ஆப் இந்தியாவில்சட்டவிரோதமாக திரண்டது குறித்து மும்பையை சேர்ந்த பிரபல வக்கீல்கள் மிகிர் தேசாய், லாரா ஜேசானி, ஜவகர்லால் நேரு பல்கலைக்கழக முன்னாள் மாணவர் தலைவர் உமர் காலித் உள்பட 60 பேர் மீதும், சுதந்திர காஷ்மீர் கோஷம் எழுப்பிய மேஹக் மிஸ்ராமீதும் தனித்தனியாக கொலபா போலீசார் வழக்குப்பதிவு செய்தனர்.
இதையடுத்து, கேட்வே ஆப் இந்தியாவில் சட்டவிரோதமாக திரண்டது தொடர்பாக மேற்கண்ட வக்கீல்கள், சமூக ஆர்வலர்கள் உள்பட 17 பேரை போலீசார் கைது செய்தனர்.