

நாமக்கல், டிச.26-
ஆந்திராவில் பதுங்கி இருந்த பிரபல கஞ்சா வியாபாரிகள் 2 பேர் அதிரடியாக கைது செய்யப்பட்டனர்.
கஞ்சா விற்பனை
நாமக்கல் அருகே உள்ள எர்ணாபுரத்தில் கடந்த நவம்பர் மாதம் 28-ந் தேதி 340 கிலோ கஞ்சா பிடிபட்டது. மேலும் இதனை கடத்தி வந்த 5 பேர் கைது செய்யப்பட்டனர். போலீசார் விசாரணையில் நாமக்கல் மாவட்டத்தை சேர்ந்த 2 பேர் ஆந்திராவில் இருந்து கொண்டு வந்து தமிழகம் முழுவதும் கஞ்சா மொத்த விற்பனையில் ஈடுபட்டது தெரியவந்தது.
இதையடுத்து அவர்களை பிடிக்க தனிப்படை அமைத்து நாமக்கல் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு சரோஜ் குமார் தாக்கூர் உத்தரவிட்டார். அதன்படி நாமக்கல் துணை போலீஸ் சூப்பிரண்டு சுரேஷ், போலீஸ் இன்ஸ்பெக்டர் குமரவேல் பாண்டியன், சப்-இன்ஸ்பெக்டர் பூபதி மற்றும் போலீசார் அடங்கிய தனிப்படையினர் பல்வேறு கோணங்களில் விசாரணை நடத்தினர்.
இந்த நிலையில் ஆந்திர மாநிலம் விசாகப்பட்டினத்தில் கஞ்சா மொத்த வியாபாரிகள் பதுங்கி இருப்பதாக போலீசாருக்கு தகவல் கிடைத்தது. இதையடுத்து அவர்களை பிடிக்க தனிப்படை போலீசார் ஆந்திர மாநிலத்திற்கு சென்றனர்.
மொத்த வியாபாரிகள் கைது
சுமார் ஒரு மாதத்திற்கு பிறகு ஆந்திராவில் பதுங்கி இருந்த நாமக்கல் மாவட்டம் கந்தம்பாளையம் அருகே உள்ள மணியனூர் போயர் தெருவை சேர்ந்த சீனிவாசன் (வயது 39), பெரியசாமி (40) ஆகியோரை தனிப்படை போலீசார் கைது செய்தனர்.
பின்னர் அவர்கள் நாமக்கல் மாவட்டத்திற்கு அழைத்து வரப்பட்டு 2 பேரிடமும் போலீசார் விசாரணை நடத்தினர். அதில் சீனிவாசனும், பெரியசாமியும் தமிழகம் முழுவதும் பல்வேறு பகுதிகளில் கஞ்சா மொத்த விற்பனையில் ஈடுபட்டது தெரியவந்தது. மேலும் மாநிலம் முழுவதும் 36 பேர் கஞ்சா விற்பனை செய்து வருவதும் தெரியவந்தது.
அவர்களின் விவரங்களை போலீசார் சேகரித்து வருகின்றனர். இதனிடையே கஞ்சா மொத்த வியாபாரிகளை கைது செய்த தனிப்படை போலீசாருக்கு போலீஸ் சூப்பிரண்டு சரோஜ்குமார் தாக்கூர் பாராட்டு சான்றிதழ்களை வழங்கி பாராட்டினார். மேலும் தேடப்படும் கஞ்சா வியாபாரிகளை கைது செய்ய உரிய நடவடிக்கை எடுக்கப்பட்டு வருவதாகவும், இதன் மூலம் நாமக்கல் மாவட்டம் மட்டுமின்றி தமிழகம் முழுவதும் கஞ்சா விற்பனை தடுக்கப்படும் எனவும் போலீஸ் சூப்பிரண்டு சரோஜ்குமார் தாக்கூர் தெரிவித்தார்.