

திருவள்ளூர்,
திருவள்ளூரை அடுத்த கும்மிடிப்பூண்டி கம்மார்பாளையம் பிள்ளையார் கோவில் தெருவை சேர்ந்தவர் கோதண்டன் (வயது 58). கடந்த மாதம் வழிப்பறியில் ஈடுபட்டதாக இவரை ஆரம்பாக்கம் போலீசார் கைது செய்து புழல் சிறையில் அடைத்தனர். போலீஸ் விசாரணையில் கைது செய்யப்பட்ட கோதண்டன் ஏற்கனவே 3 வழிப்பறி வழக்குகளில் சம்பந்தப்பட்டு கைது செய்யப்பட்டவர் என்பது தெரியவந்தது.
கும்மிடிப்பூண்டியை அடுத்த அயநல்லூர் கிராமம் பெருமாள் கோவில் தெருவை சேர்ந்தவர் சுரேஷ் (42). இவர் ஆந்திராவில் இருந்து மது பாட்டில்களை வாங்கி வந்து அவற்றை பதுக்கி வைத்து கூடுதல் விலைக்கு விற்பனை செய்ததாக கடந்த ஆண்டு பொன்னேரி மதுவிலக்கு அமல்பிரிவு போலீசாரால் கைது செய்யப்பட்டு புழல் சிறையில் அடைக்கப்பட்டார்.
விசாரணையில் அவர் ஏற்கனவே 3 முறை இதே போல மதுபாட்டில்களை பதுக்கி விற்ற வழக்கில் கைது செய்யப்பட்டவர் என்பது தெரியவந்தது. தொடர்ந்து குற்றவழக்கில் ஈடுபட்டு வரும் கோதண்டன் மற்றும் சுரேஷ் ஆகியேரை குண்டர் தடுப்பு சட்டத்தின் கீழ் கைது செய்து நடவடிக்கை எடுக்கவேண்டும் என திருவள்ளூர் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு சிபி சக்கரவர்த்தி, கலெக்டர் சுந்தரவல்லிக்கு பரிந்துரை செய்தார். அதை ஏற்றுக்கொண்ட கலெக்டர் கோதண்டன், சுரேஷ் இருவரையும் குண்டர் தடுப்பு சட்டத்தின் கீழ் சிறையில் அடைக்க உத்தரவிட்டார். இதற்கான உத்தரவு நகல் புழல் சிறை அதிகாரிகளிடம் வழங்கப்பட்டது.