வன்னியர்களுக்கு 20 சதவீத தனி இடஒதுக்கீடு: சென்னை மாநகராட்சி நிர்வாகத்திடம் கோரிக்கை மனு கொடுக்கும் போராட்டம்

பா.ம.க. சார்பில் வன்னியர்களுக்கு தனி இடஒதுக்கீடு வழங்கக்கோரி தமிழகம் முழுவதும் மாநகராட்சியில் கோரிக்கை மனு கொடுக்கும் போராட்டம் நேற்று நடைபெற்றது.
சென்னை மாநகராட்சி இணை கமிஷனரிடம் பா.ம.க. தலைவர் ஜி.கே.மணி தலைமையில் பா.ம.க.வினர் கோரிக்கை மனு வழங்கும் காட்சி.
சென்னை மாநகராட்சி இணை கமிஷனரிடம் பா.ம.க. தலைவர் ஜி.கே.மணி தலைமையில் பா.ம.க.வினர் கோரிக்கை மனு வழங்கும் காட்சி.
Published on

மனு வழங்கும் போராட்டம்

தமிழகம் முழுவதும் உள்ள 15 மாநகராட்சி அலுவலகங்களில், வன்னியர்களுக்கு 20 சதவீதம் தனி இடஒதுக்கீடு வழங்க வலியுறுத்தி கோரிக்கை மனு அளிக்கும் போராட்டம் நேற்று நடைபெற்றது. சென்னையில், ரிப்பன் மாளிகை அருகே நடைபெற்ற போராட்டத்துக்கு பா.ம.க. தலைவர் ஜி.கே.மணி தலைமை தாங்கினார். வடக்கு மண்டல இணை பொது செயலாளர்ஏ.கே.மூர்த்தி, துணை தலைவர் சாம்பால், மாணவரணி செயலாளர் செஞ்சி ரவி, மாவட்ட துணை செயலாளர் ப.வெங்கடேசன், வக்கீல்களுக்கான சமூகநிதி பேரவை தலைவர் பாலு ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

இந்த போராட்டத்தில் பா.ம.க.வினர் மற்றும் வன்னியர் சங்கத்தின் நிர்வாகிகள் மற்றும் தொண்டர்கள் பலர் கலந்து கொண்டு, இடஒதுக்கீடு கேட்டு கோஷமிட்டனர். இதைத்தொடர்ந்து பா.ம.க. தலைவர் ஜி.கே.மணி, இணை பொது செயலாளர்ஏ.கே.மூர்த்தி தலைமையில், பெருநகர சென்னை மாநகராட்சியின் இணை கமிஷனரை நேரில் சந்தித்து கோரிக்கை மனுவை பா.ம.க.வினர் அளித்தனர். முன்னதாக ஜி.கே.மணி நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-

தனி இடஒதுக்கீடு

தமிழகத்தில் அரசின் உயர் பதவியான குருப்-1 பணிகளில் வன்னியர்களுக்கு 2 சதவீதமே கிடைக்கிறது. இதைப்போல் பல்வேறு அரசு பிரிவுகளிலும் மிகவும் குறைந்த சதவீதமே கிடைக்கிறது. இது வன்னியர்களுக்கு இழைக்கப்பட்ட அநீதி. பா.ம.க.வின் பல்வேறு கட்ட போராட்டங்களுக்கு பின்னர் எம்.பி.சி. என பிரித்து ஒதுக்கீடு வழங்கப்பட்டுள்ளது.

எம்.பி.சி. பிரிவில் 108 சமூகத்தினருக்கு மேல் உள்ளனர். இதனால் வன்னியர்களுக்கு கிடைக்கும் இடம் குறைகிறது. இந்த நிலையில் எம்.பி.சி. பிரிவில் தனி இடஒதுக்கீடு உடனடியாக வழங்க வேண்டும். தமிழகத்தில் பெரும் சமூகத்தினரான வன்னியர்களின் வளர்ச்சியில் தான், தமிழகத்தின் வளர்ச்சி உள்ளது. எனவே இந்த இடஒதுக்கீட்டை உடனடியாக வழங்க வேண்டும்.

அறவழி போராட்டம்

தமிழகத்தில் கடந்த டிசம்பர் மாதம் 1-ந்தேதி முதல் பா.ம.க. அறவழியில் போராட்டம் நடத்தி வருகிறது. தமிழக முதல்-அமைச்சர் 6 மாத காலம் அவகாசம் கேட்டுள்ளார். தேர்தலுக்கு பின்னர் எங்களது கோரிக்கையை நிறைவேற்றுவார்கள் என்பது சந்தேகம்தான். எனவே உடனடியாக நிறைவேற்ற வேண்டும். இல்லை என்றால் தலைவர் டாக்டர் ராமதாஸ் தலைமையில் தமிழகமே கண்டிராத பெரும் போராட்டத்தை நடத்துவோம்.

இவ்வாறு அவர் கூறினார்.

Related Stories

No stories found.
X

Daily Thanthi
www.dailythanthi.com