

திருப்பூர்,
திருப்பூர் மாவட்டம் உடுமலையை அடுத்துள்ள போளரப்பட்டி மற்றும் ஜோதிபாளையம் ஆகிய ஊர் பொதுமக்கள் மற்றும் இளைஞர்கள் சார்பில் மழை பெய்ய வேண்டி முதலாம் ஆண்டு ரேக்ளா பந்தயம் நேற்றுகாலை முதல் மாலை வரை நடைபெற்றது.
இந்த ரேக்ளா பந்தயம் போளரப்பட்டி- ஜோதிபாளையம் இடையிலான சாலையில் நடந்தது. இதில் கலந்து கொள்வதற்கு உடுமலை, மடத்துக்குளம், தாராபுரம், திருப்பூர், பொள்ளாச்சி, கோவை உள்பட பல்வேறு ஊர்களை சேர்ந்த ரேக்ளா பந்தய வீரர்கள் தங்களது காளை மாடுகள், வண்டிகளுடன் வந்திருந்தனர்.
போட்டிகள் 200 மீட்டர், 300 மீட்டர் என 2 பிரிவுகளில் நடத்தப்பட்டது. 200 மீட்டர் ரேக்ளா பந்தயத்தில் 197 வண்டிகளும், 300 மீட்டர் ரேக்ளா பந்தயத்தில் 49 வண்டிகளும் பங்கேற்றன. பந்தயத்தில் பங்கேற்க வந்திருந்த வண்டிகளும், மாடுகளும் அந்த பகுதியில் உள்ள தென்னந்தோப்பு உள்ளிட்ட இடங்களில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்தன. பின்னர் பந்தயம் தொடங்கியது. ரேக்ளா பந்தயத்தில் காளைகள் இலக்கை நோக்கி சீறிப்பாய்ந்தன. இதை சாலையின் இருபுறங்களிலும் பொதுமக்கள் திரண்டு நின்று பார்வையிட்டனர்.
200 மீட்டர் மற்றும் 300 மீட்டர் பந்தயத்தில் வெற்றி பெற்ற வீரர்கள் ஒவ்வொருவருக்கும் முதல் பரிசாக பவுன் தங்க நாணயமும், 2-வது பரிசாக பவுன் தங்க நாணயமும், 3-வது பரிசாக பவுன் தங்க நாணமும், 4 முதல் 10-வது இடம் வரை ஒரு கிராம் தங்க நாணயமும் வழங்கப்பட்டது. 200 மீட்டர் பந்தயத்தில் 11-வது இடம் முதல் 25-வது இடம் வரை வெள்ளி நாணயமும், 300 மீட்டர் பந்தயத்தில் 11-வது இடம் முதல் 20-வது இடம் வரை வெள்ளி நாணயமும் பரிசாக வழங்கப்பட்டது.