அடகு கடையின் பூட்டை உடைத்து 25 பவுன் நகை கொள்ளை

வாய்மேட்டில் அடகு கடையின் பூட்டை உடைத்து 25 பவுன் நகை கொள்ளையடிக்கப்பட்டது. பாதுகாப்பு பெட்டகத்தை மர்ம நபர்கள் தூக்கி சென்றனர்.
அடகு கடையின் பூட்டை உடைத்து 25 பவுன் நகை கொள்ளை
Published on: 

வாய்மேடு,

நாகை மாவட்டம் வாய்மேடு மேற்கு பகுதியை சேர்ந்தவர் ராதாகிருஷ்ணன் (வயது62). இவர் முன்னாள் மாவட்ட கவுன்சிலர். இவர் வீட்டிற்கு அருகே அடகு கடை வைத்து நடத்தி வருகிறார். நேற்று முன்தினம் இரவு ராதாகிருஷ்ணன் வழக்கம் போல் அடகு கடையை பூட்டிவிட்டு வீட்டிற்கு சென்றுவிட்டார். நேற்று காலை வழக்கம் போல ராதாகிருஷ்ணன் அடகுகடைக்கு சென்று பார்த்தபோது பூட்டு உடைக்கப்பட்டு திறந்து கிடந்ததை கண்டு அதிர்ச்சியடைந்தார். பின்னர் உள்ளே சென்று பார்த்தபோது 25 பவுன் நகைகள் வைக்கப்பட்டிருந்த இரும்பு பெட்டகம் கொள்ளையடிக்கப்பட்டிருந்தது.

வலைவீச்சு

இதுகுறித்து ராதாகிருஷ்ணன் வாய்மேடு போலீசாருக்கு தகவல் தெரிவித்தார்.அதன் பேரில் வேதாரண்யம் துணை போலீஸ் சூப்பிரண்டு (பொறுப்பு) அரசன், வாய்மேடு போலீஸ் இன்ஸ்பெக்டர் (பொறுப்பு) அறிவழகன் மற்றும் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று விசாரணை நடத்தினர். இதில் நள்ளிரவில் மர்ம நபர்கள் அடகு கடையின் வெளிப்புற கேட்டின் பூட்டு, உள்புற கதவு பூட்டுகளை உடைத்து உள்ளே சென்று, அங்கு வைக்கப்பட்டிருந்த இரும்பு பாதுகாப்பு பெட்டகத்தை தூக்கிக்கொண்டு சென்றுவிட்டனர்.

மேலும், அருகில் உள்ள உரக்கடையில் பூட்டை உடைத்து உள்ளே சென்றுள்ளனர். அங்கு பணம் எதுவும் இல்லாததால் திரும்பி சென்றுள்ளதும் தெரியவந்தது. மேலும், கைரேகை நிபுணர் சோமசுந்தரம் சம்பவ இடத்தில் இருந்த கைரேகைகளை பதிவு செய்தார். நாகையில் இருந்து போலீஸ் மோப்பநாய் வரவழைக்கப்பட்டது. இந்த மோப்பநாய் நகை கடையில் இருந்து சிறிது தூரம் ஓடி நின்றுவிட்டது. யாரையும் கவ்வி பிடிக்கவில்லை.

இதுகுறித்து ராதாகிருஷ்ணன் கொடுத்த புகாரின் பேரில் வாய்மேடு போலீசார் வழக்குப்பதிவு செய்து மர்ம நபர்களை வலைவீசி தேடி வருகின்றனர். கடந்த சில தினங்களுக்கு முன்பு தாணிக்கோட்டகம் பகுதியில் பூட்டியிருந்த வீட்டில் மர்ம நபர்கள் திருடி சென்றனர். எனவே தொடர் திருட்டு சம்பவங்கள் நடைபெற்று வருவதால் வாய்மேடு பகுதியை சேர்ந்த பொதுமக்கள் அச்சத்தில் உள்ளனர்.

X

Daily Thanthi
www.dailythanthi.com