

களியக்காவிளை:
குழித்துறை அருகே கொரோனாவில் இருந்து மீண்ட நிலையில் 2-வது முறை மீண்டும் தொற்று உறுதியானதால் பெண் விஷம் குடித்து தற்கொலை செய்து கொண்டார்.
கொரோனா சிகிச்சை
குழித்துறை அருகே பாலவிளையை சேர்ந்தவர் சரோஜினி (வயது 57). இவர் கொரோனாவால் பாதிக்கப்பட்டு ஆசாரிபள்ளம் ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்று வந்தார். கடந்த 12 -ந் தேதி குணமடைந்து வீட்டுக்கு திரும்பினார்.
மறுநாள் அவருக்கு மீண்டும் உடல்நலம் பாதிக்கப்பட்டது. இதையடுத்து நாகர்கோவிலில் உள்ள ஒரு தனியார் பரிசோதனை மையத்தில் கொரோனா பரிசோதனை மேற்கொண்டார். அதில் அவருக்கு மீண்டும் தொற்று ஏற்பட்டிருப்பது உறுதியானது.
தற்கொலை
இதனால் அவர் மனமுடைந்து காணப்பட்டார். இந்தநிலையில் சரோஜினி நேற்று வீட்டில் விஷம் குடித்து தற்கொலை செய்து கொண்டார். இதுகுறித்து களியக்காவிளை போலீசுக்கு தகவல் கொடுக்கப்பட்டது. போலீசார் சம்பவ இடத்துக்கு சன்று பிணத்தை கைப்பற்றி குழித்துறை அரசு ஆஸ்பத்திரிக்கு பிரத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். இதுகுறித்து களியக்காவிளை போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.
தற்கொலை செய்த சரோஜினியின் மகன் கொரோனா தொற்றினால் பாதிக்கப்பட்டு மருத்துவ துறையினரின் வழிகாட்டுதல் படி வீட்டின் மாடியில் தன்னை தனிமைப்படுத்தி சிகிச்சை பெற்று வருகிறார். மேலும், அவரது கணவருக்கு, சளி, இருமல் இருப்பதால் கொரோனா பரிசோதனைக்கு சளி மாதிரி அனுப்பி வைக்கப்பட்டுள்ளது. இந்த நிலையில் சரோஜினி தற்கொலை செய்த சம்பவம் அந்த பகுதியில் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.