தூத்துக்குடியில் மீனவர் கொலையில் நண்பர்கள் 3 பேர் கைது

தூத்துக்குடியில் நடந்த மீனவர் கொலையில் அவரது நண்பர்கள் 3 பேரை போலீசார் கைது செய்தனர்.
கிளிண்டன்
கிளிண்டன்
Published on

மீனவர் கொலை

தூத்துக்குடி தாளமுத்து நகர் கடற்கரை பகுதியில் நேற்று முன்தினம் இரவு வாலிபர் ஒருவர் உடலில் ரத்தக்காயங்களுடன் கொலை செய்யப்பட்டு கிடப்பதாக போலீசாருக்கு தகவல் கிடைத்தது. இதையடுத்து மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு ஜெயக்குமார், துணை சூப்பிரண்டு கணேஷ் ஆகியோர் சம்பவ இடத்துக்கு நேரில் சென்று பார்வையிட்டு விசாரணை நடத்தினர். மேலும் இச்சம்பவம் தொடர்பாக இன்ஸ்பெக்டர் ஜெயந்தி வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினார்.

விசாரணையில், கொலையானவர் தாளமுத்துநகர் அருகே உள்ள பெரிய மாதா சர்ச் தெருவை சேர்ந்த அந்தோணிசாமி பூபால்ராயர் மகன் கிளிண்டன் (வயது 25), மீனவர் என்பது தெரியவந்தது.

3 பேர் கைது

கிளிண்டனும், சாமுவேல்புரத்தை சேர்ந்த மகேஷ்குமார் மகன் டேனியல்ராஜ் (20), பூபால்ராயர்புரத்தைச் சேர்ந்த அண்டன்கோமஸ் மகன் அந்தோணிராஜ் (22), மாதா கோவில் தெருவைச் சேர்ந்த சந்தனராஜ் (40) ஆகியோர் நண்பர்கள் என்பதும், புத்தாண்டு அன்று இரவு இவர்கள் மூவரும் கிளின்டன் வீட்டிற்கு சென்று அவரை மது அருந்த அழைத்துச் சென்றுள்ளனர்.

மதுபோதையில் அவர்களுக்கு இடையே ஏற்பட்ட தகராறில் மூன்று பேரும் சேர்ந்து கிளிண்டனை மது பாட்டிலால் குத்தி கொலை செய்தது தெரியவந்தது.

இதனைத்தொடர்ந்து போலீசார் டேனியல்ராஜ், அந்தோணிராஜ் மற்றும் சந்தனராஜ் ஆகிய 3 பேரையும் கைது செய்தனர். அவர்களிடம் மேலும் விசாரணை நடத்தி வருகின்றனர்.

X

Daily Thanthi
www.dailythanthi.com