

திருப்பத்தூர்
அமைச்சர் காந்தி ஆய்வு
திருப்பத்தூர் மாவட்டத்தில் நாளுக்கு நாள் கொரோனா தொற்று அதிகரித்து வருகிறது. மாவட்டத்தில் கொரோனாவுக்கு சிகிச்சை பெறுவோரின் எண்ணிக்கை சுமார் 3 ஆயிரத்தைத் தாண்டி உள்ளது. இதனால் சிகிச்சை அளிக்க போதுமான இடவசதி இல்லாமல் நோயாளிகள் பெரிதும் அவதிப்படுகின்றனர்.
இதனை கருத்தில் கொண்டு திருப்பத்தூர் மாவட்டத்தில் உள்ள திருப்பத்தூர், நாட்டறம்பள்ளி, வாணியம்பாடி அரசு ஆஸ்பத்திரிகள், ஆம்பூர் வர்த்தக மையம் ஆகிய இடங்களில் கொரோனா நோயாளிகளுக்கு ஆக்சிஜன் வசதியுடன் கூடிய 350 படுக்கைகள் அமைத்து சிகிச்சை அளித்திட தனியார் பங்களிப்புடன் ஏற்பாடுகள் நடந்து வருகிறது.
அதனை நேற்று கைத்தறி மற்றும் துணிநூல் துறை அமைச்சர் ஆர்.காந்தி பார்வையிட்டு அவசர சிகிச்சை மையங்களை அமைத்திட அனைத்து ஏற்பாடுகளையும் உடனடியாக மேற்கொள்ள மாவட்ட கலெக்டருக்கு உத்தரவிட்டார்.
அப்போது அமைச்சர் கூறியதாவது:-
4 நாட்களில்
திருப்பத்தூர், வாணியம்பாடி அரசு ஆஸ்பத்திரியிலும், ஆம்பூர் வர்த்தக மையத்திலும் தலா 100 படுக்கை வசதி மற்றும் நாட்டறம்பள்ளி அரசு ஆஸ்பத்திரியில் 50 படுக்கை வசதிகள் என 350 ஆக்சிசன் படுக்கை வசதி போர்க்கால அடிப்படையில் 4 நாட்களில் அமைக்கப்பட உள்ளது.
தேவையான மின்சார வசதி, மின்விசிறி, கழிப்பறை வசதி ஆகியவையும் உடனுக்குடன் மேற்கொள்ளப்படும்.
இவ்வாறு அவர் கூறினார்.