பணம் பறித்த 4 வாலிபர்கள் கைது

வடமதுரை அருகே பணம் பறித்த 4 வாலிபர்களை போலீசார் கைது செய்தனர்
பணம் பறித்த 4 வாலிபர்கள் கைது
Published on

திண்டுக்கல்:

நாகப்பட்டினம் மாவட்டம், வெளிப்பாளையம் சிவன் வடக்கு வீதியை சேர்ந்தவர் ராஜசேகர் (வயது 46). வேன் டிரைவர். இவர் கடந்த 14-ந்தேதி இரவு கேரளாவில் மீன்களை இறக்கி விட்டு நாகப்பட்டினத்துக்கு சென்று கெண்டிருந்தார்.

திண்டுக்கல்- திருச்சி தேசிய நெடுஞ்சாலையில் வடமதுரையை அடுத்த மோர்பட்டி அருகே வந்தபோது 4 மர்ம நபர்கள் வேனை வழிமறித்தனர். வேனில் இருந்த ராஜசேகரை தாக்கி காட்டு பகுதிக்கு இழுத்து சென்றதாக கூறப்படுகிறது.

அதன் பின்னர் அவரிடம் பணம் கேட்டு மிரட்டினர். அவர் தர மறுத்ததால், கத்தியால் குத்திவிட்டு, ரூ.35 ஆயிரத்தை பறித்துக் கொண்டு மர்ம நபர்கள் தப்பியோடிவிட்டனர். இதில் பலத்த காயமடைந்த ராஜசேகரை அக்கம்பக்கத்தினர் மீட்டு சிகிச்சைக்காக திண்டுக்கல் அரசு மருத்துவமனையில் சேர்த்தனர்.

இந்த சம்பவம் குறித்து ராஜசேகர் கொடுத்த புகாரின் பேரில் வடமதுரை போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் பிரபாகரன் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வந்தார்.

போலீஸ் விசாரணையில் ராஜசேகரை தாக்கி பணத்தை பறித்து சென்றது மோர்பட்டியை சேர்ந்த தினேஷ் கண்ணன் (வயது 24), ராஜேஷ்கண்ணன் (27), செங்குளத்துபட்டியைச் சேர்ந்த சாமிக்கண்ணு என்ற சூசை (33), கொல்லபட்டியைச் சேர்ந்த ராம்குமார் (35) என்பது தெரியவந்தது. இதையடுத்து அவர்கள் 4 பேரையும் போலீசார் கைது செய்து வேடசந்தூர் சிறையில் அடைத்தனர்.

X

logo
Daily Thanthi
www.dailythanthi.com