திருமணமான 5 மாதத்தில் விபரீதம்: கர்ப்பிணி தூக்குப்போட்டு தற்கொலை ஆர்.டி.ஓ. விசாரணை

பொன்னேரியில் திருமணமாகி 5 மாதமே ஆன கர்ப்பிணி தூக்குப்போட்டு தற்கொலை செய்துகொண்டார். இதுகுறித்து ஆர்.டி.ஓ. விசாரணை நடத்தி வருகிறார்.
திருமணமான 5 மாதத்தில் விபரீதம்: கர்ப்பிணி தூக்குப்போட்டு தற்கொலை ஆர்.டி.ஓ. விசாரணை
Published on

பொன்னேரி,

பொன்னேரி அடுத்த வேண்பாக்கம் கிராமத்தில் வசிப்பவர் கணேசன் (வயது 30). இவர் காட்டுப்பள்ளியில் உள்ள எண்ணூர் துறைமுகத்தில் ஒப்பந்த ஊழியராக வேலை செய்து வருகிறார்.

இவருக்கு கடந்த டிசம்பர் மாதம் சசிகலா (28) என்ற பெண்ணுடன் திருமணம் நடந்தது. இந்நிலையில் சசிகலா 2 மாதம் கர்ப்பமாக இருந்து வந்தார். இந்நிலையில் கணேசனுக்கும், சசிகலாவுக்கும் வீட்டில் அடிக்கடி குடும்பத்தகராறு ஏற்பட்டு வந்ததாக தெரிகிறது.

நேற்று முன்தினம் இரவு கணேசன் வேலைக்கு சென்றுவிட்டார். வேலை முடிந்து நேற்று காலை வீட்டிற்கு வந்தபோது, சசிகலா தூக்குப்போட்டு தற்கொலை செய்ததை கண்டு அதிர்ச்சி அடைந்தார்.

இதுகுறித்து பொன்னேரி போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. அவர்கள் விரைந்து வந்து சசிகலாவின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் இருவருக்கும் திருமணமாகி 5 மாதமே ஆனதையடுத்து ஆர்.டி.ஓ. நந்தகுமார் தற்கொலைக்கான காரணம் குறித்து விசாரணை நடத்தி வருகிறார்.

X

Daily Thanthi
www.dailythanthi.com