கம்பத்தில் கள்ள ரூபாய் நோட்டுகளை புழக்கத்தில் விட முயன்ற 6 பேர் கைது

கம்பத்தில் கள்ள ரூபாய் நோட்டுகளை புழக்கத்தில் விட முயன்ற தந்தை, மகன் உள்பட 6 பேரை போலீசார் கைது செய்தனர்.
கம்பத்தில் கள்ள ரூபாய் நோட்டுகளை புழக்கத்தில் விட முயன்ற 6 பேர் கைது
Published on

கம்பம்,

தேனி மாவட்டம் கம்பத்தில் யானைக்குழாய் என்ற இடத்தில் உள்ள புளியந்தோப்பில் சந்தேகத்துக்கு இடமான முறையில் ஒரு கார் நின்று கொண்டிருந்தது. இதனை கண்ட போலீசார் அங்கு சென்று விசாரணை நடத்தினர். அப்போது, அவர்கள் முன்னுக்குப்பின் முரணான தகவலை தெரிவித்தனர்.

இதனால் அந்த காரை சோதனை செய்தபோது காருக்குள் 2 ஆயிரம் ரூபாய் நோட்டுகள் கட்டு கட்டாக இருந்தன. அவை, கள்ள ரூபாய் நோட்டுகள் என்று தெரியவந்தது. இதைத்தொடர்ந்து காரில் இருந்த ரூ.2 லட்சத்து 26 ஆயிரம் கள்ள நோட்டுகளை போலீசார் பறிமுதல் செய்தனர். மேலும் அந்த காரை போலீசார் கைப்பற்றினர்.

இதைத்தொடர்ந்து காரில் இருந்தவர்களை பிடித்து விசாரித்தனர். விசாரணையில் அவர்கள் கம்பத்தை சேர்ந்த அஜ்மல்கான் (வயது 34), போடியை சேர்ந்த செல்வராஜ் (60), அவருடைய மகன் சசிக்குமார் (35), ராஜேந்திரன் (64) ஆகியோர் என்று தெரியவந்தது. அவர்கள் 4 பேரும் கைது செய்யப்பட்டனர்.

அவர்கள் கொடுத்த தகவலின் பேரில் உத்தமபாளையத்தை சேர்ந்த சுப்பையா (48), கண்ணன் (35) ஆகியோரும் கைதானார்கள். அவர்களிடம் இருந்து தலா ரூ.20 ஆயிரம் வீதம் 40 ஆயிரம் கள்ள ரூபாய் நோட்டுகள் பறிமுதல் செய்யப்பட்டது. கைதான 6 பேரும் கள்ளநோட்டுகளை புழக்கத்தில் விட முயன்றது தெரியவந்தது.

கைதான அஜ்மல்கானின் தந்தை ஜாபருல்லா, கள்ள ரூபாய் நோட்டுகளை புழக்கத்தில் விட்டதாக கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டு உள்ளார். அவர், தனது மகன் அஜ்மல்கான் மூலம் கள்ள நோட்டுகளை புழக்கத்தில் விட திட்டமிட்டு கம்பம், உத்தமபாளையத்தை சேர்ந்த 5 பேரை அணுகினார். அவர்களிடம் ரூ.20 ஆயிரம் அசல் நோட்டுகளை வாங்கி விட்டு, ஒரு லட்சம் கள்ள ரூபாய் நோட்டுகளை கொடுத்தது விசாரணையில் தெரியவந்தது.

Related Stories

No stories found.
X

Daily Thanthi
www.dailythanthi.com