சட்டசபை தேர்தல் தேதி அறிவிப்புக்கு முன்பு 7 பொதுக்கூட்டங்களில் பிரதமர் மோடியை பங்கேற்க வைக்க திட்டம்

கர்நாடக சட்டசபை தேர்தல் தேதி அறிவிப்புக்கு முன்பு மோடியை 7 பொதுக்கூட்டங்களில் பங்கேற்கவைக்க பா.ஜனதா திட்டமிட்டுள்ளது.
சட்டசபை தேர்தல் தேதி அறிவிப்புக்கு முன்பு 7 பொதுக்கூட்டங்களில் பிரதமர் மோடியை பங்கேற்க வைக்க திட்டம்
Published on

பெங்களூரு,

கர்நாடக சட்டசபை தேர்தல் தேதி அறிவிப்புக்கு முன்பு மோடியை 7 பொதுக்கூட்டங்களில் பங்கேற்கவைக்க பா.ஜனதா திட்டமிட்டுள்ளது.

கர்நாடக சட்டசபைக்கு அடுத்த ஆண்டு(2018) ஏப்ரல் அல்லது மே மாதங்களில் தேர்தல் நடைபெற உள்ளது. இதற்காக ஆளும் காங்கிரஸ், பா.ஜனதா மற்றும் ஜனதா தளம்(எஸ்) கட்சிகள் முழுவீச்சில் தயாராகி வருகின்றன. பூத் கமிட்டி மட்டத்தில் குழுக்களை அமைப்பது, பொதுக்கூட்டங்களை நடத்துவது, முக்கிய நிர்வாகிகள் தொகுதிகளில் அதிக நேரத்தை செலவிடுவது போன்ற செயல்களில் கட்சிகளின் தலைவர்கள் ஈடுபட்டுள்ளனர்.

கர்நாடகத்தில் ஆட்சியை தக்க வைத்துக்கொள்ள காங்கிரஸ் தீவிர முயற்சியில் இறங்கியுள்ளது. நாடு முழுவதும் காங்கிரஸ் பெரும் பின்னடைவை சந்தித்துள்ள நிலையில் கர்நாடகத்தில் ஆட்சியை தக்க வைத்துக்கொள்வது என்பது அந்த கட்சிக்கு மிக முக்கியமானது. அதே நேரத்தில் இழந்த ஆட்சியை எப்படியாவது கைப்பற்றிவிட வேண்டும் என்று எதிர்க்கட்சியான பா.ஜனதா களம் இறங்கியுள்ளது.

இன்னொரு புறம் சொந்த பலத்தில் ஆட்சியை பிடிப்போம் என்று ஜனதா தளம்(எஸ்) கட்சி கூறி வருகிறது. இந்த மூன்று கட்சிகளுமே ஆட்சி மீது கண் வைத்து காய்களை நகர்த்தி வருகிறது. பா.ஜனதாவுக்கு பிரதமர் மோடி பிரசார பீரங்கியாக உள்ளார். அதனால் கர்நாடக சட்டசபை தேர்தல் தேதி அறிவிக்கப்படுவதற்கு முன்பாக 7 பொதுக்கூட்டங்களில் பிரதமர் மோடியை பங்கேற்கவைக்க கர்நாடக பா.ஜனதாவினர் திட்டமிட்டுள்ளனர்.

வருகிற 29ந் தேதி பீதரில் நடைபெறும் கட்சி பொதுக்கூட்டத்தில் மோடி பேசுகிறார். அதைத்தொடர்ந்து அடுத்த ஆண்டு(2018) ஜனவரி மாதம் பெங்களூருவில் கட்சி கூட்டத்தில் அவர் கலந்துகொள்ள திட்டமிட்டுள்ளார். அதனைதொடர்ந்து மைசூரு, உப்பள்ளி, தாவணகெரே, துமகூரு, பல்லாரி உள்பட 7 பொதுக்கூட்டங்களில் மோடி பங்கேற்பார் என்று கூறப்படுகிறது.

தேர்தல் அறிவிப்புக்கு முன்பாகவே வாக்காளர்களை கவர வேண்டும் என்ற நோக்கத்தில் பா.ஜனதா சார்பில் இந்த பொதுக்கூட்டங்கள் நடத்தப்படும் என்று சொல்லப்படுகிறது. ஒவ்வொரு பொதுக்கூட்டத்திலும் 2 முதல் 3 லட்சம் கட்சி தொண்டர்களை திரட்டி பலத்தை காட்ட பா.ஜனதாவினர் திட்டமிட்டு உள்ளனர். இது கர்நாடக பா.ஜனதாவின் தேர்தல் வியூகங்களில் ஒன்று என்பது குறிப்பிடத்தக்கது ஆகும்.

Related Stories

No stories found.
X

Daily Thanthi
www.dailythanthi.com