கொடைக்கானல் மலையில் ஆயுதப்பயிற்சி மேற்கொண்ட வழக்கு, 7 மாவோயிஸ்டுகளும் வக்கீலுடன் ஆஜராக நீதிபதி உத்தரவு

கொடைக்கானல் மலையில் ஆயுதப்பயிற்சி மேற்கொண்ட வழக்கில் 7 மாவோயிஸ்டுகளும் வக்கீலுடன் ஆஜராகும்படி நீதிபதி உத்தரவிட்டார்.
கொடைக்கானல் மலையில் ஆயுதப்பயிற்சி மேற்கொண்ட வழக்கு, 7 மாவோயிஸ்டுகளும் வக்கீலுடன் ஆஜராக நீதிபதி உத்தரவு
Published on

திண்டுக்கல்,

கொடைக்கானல் அருகே வடகவுஞ்சி மலைப்பகுதியில் கடந்த 2008-ம் ஆண்டு மாவோயிஸ்டுகள் பதுங்கி இருந்து ஆயுதப்பயிற்சி மேற்கொண்டனர். இதுபற்றிய தகவல் கிடைத்ததும் சிறப்பு அதிரடிப்படை போலீசார் விரைந்து சென்று சுற்றி வளைத்தனர். மேலும் போலீசார் நடத்திய துப்பாக்கிச்சூட்டில் நவீன்பிரசாத் என்ற மாவோயிஸ்டு கொல்லப்பட்டார்.

அதேநேரம் 2 பெண்கள் உள்பட 7 பேர் தப்பியோடி விட்டனர். இதுகுறித்து கொடைக்கானல் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்தனர். மேலும் தப்பியோடிய மாவோயிஸ்டுகளான ரீனாஜாய்ஸ்மேரி, செண்பகவல்லி, ரஞ்சித், நீலமேகம், பகத்சிங், காளிதாஸ், கண்ணன் ஆகியோரை போலீசார் கைது செய்தனர். இதில் ரஞ்சித், நீலமேகம் ஆகியோர் ஜாமீனில் வெளியே சென்று விட்டனர்.

இந்த நிலையில் மாவோயிஸ்டுகள் மீதான வழக்கு திண்டுக்கல் மாவட்ட கோர்ட்டில் நேற்று விசாரணைக்கு வந்தது. அப்போது சிறையில் இருக்கும் ரீனாஜாய்ஸ்மேரி, செண்பகவல்லி, பகத்சிங் ஆகியோரை போலீசார் பலத்த பாதுகாப்புடன் அழைத்து வந்து கோர்ட்டில் ஆஜர்படுத்தினர். அதேபோல் ரஞ்சித், நீலமேகம் ஆகியோரும் ஆஜராகினர்.

மேலும் கேரள சிறையில் இருக்கும் காளிதாஸ், கோவை சிறையில் இருக்கும் கண்ணன் ஆகியோர் காணொலிக்காட்சி மூலம் ஆஜர்படுத்தப்பட்டனர். அப்போது 7 மாவோயிஸ்டுகளும் வக்கீலுடன் ஆஜராக வேண்டும் என்று, நீதிபதி முரளிசங்கர் உத்தரவிட்டார். மேலும் வழக்கின் விசாரணையை வருகிற 19-ந்தேதிக்கு நீதிபதி தள்ளிவைத்தார். இந்த வழக்கில் 7 பேருக்கும் ஏற்கனவே குற்றப்பத்திரிகை நகல் வழங்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.

X

Daily Thanthi
www.dailythanthi.com