

கோவை
கோவையில் இ-பதிவு இல்லாமல் வாகனங்களில் சுற்றிய 1,432 பேருக்கு அபராதம் விதிக்கப்பட்டது.
இ-பதிவு முறை
தமிழகம் முழுவதும் கடந்த 10-ந் தேதி முதல் வருகிற 24-ந் தேதி வரை முழு ஊரடங்கு கடைபிடிக்கப்பட்டு வருகிறது. காலை 10 மணி வரை அத்தியாவசிய பொருட்கள் விற்பனை செய்யும் கடைகள் திறக்கப்பட்டு உள்ளன.
அதன் பிறகு தேவை இல்லாமல் சாலையில் சுற்றுபவர்கள் மீது போலீசார் நடவடிக்கை எடுத்து வருகிறார்கள். இறப்பு, திருமணம், மருத்துவ சேவை உள்ளிட்ட அவசர தேவைகளுக்கு செல்வோர் இ-பதிவு சான்றுகளைக் காட்டினால் அனுமதி அளிக்கப்பட்டு வருகிறது.
செல்போனில் புகைப்படம்
இந்த நிலையில் கோவை மாநகர பகுதியில் போலீசார் நேற்று தீவிர கண்காணிப்பு பணியில் ஈடுபட்டு, இ-பதிவு இல்லாமல் வாகனங்களில் சுற்றித்திரிந்தவர்களை செல்போன் மூலம் புகைப்படம் எடுத்து உடனடியாக அபராதம் விதித்தனர்.
மேலும் முக்கிய சாலைகளில் தடுப்புகள் வைத்து தீவிர கண்காணிப்பு பணியில் ஈடுபட்டதுடன், அத்தியாவசிய தேவைகளுக்காக செல்பவர்களுக்கு மட்டும் அனுமதி அளித்தனர்.
194 வாகனங்கள் பறிமுதல்
இதுதவிர பெரியநாயக்கன்பாளையம், பேரூர், வால்பாறை, கருமத்தம் பட்டி, பொள்ளாச்சி, மேட்டுப்பாளையம் உள்ளிட்ட போலீஸ் நிலையங்களுக்கு உட்பட்ட பகுதிகளில் ஒரே நாளில் மட்டும் முழு ஊரடங்கு விதிகளை மீறியதாக 82 பேர் மீதும், கோவை மாநகரில் 1350 பேர் மீதும் என 1,432 பேர் மீது தொற்று நோய் பரவல் தடுப்பு சட்டத்தின் கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டு அபராதம் விதிக்கப்பட்டது.
மேலும் 194 வாகனங்கள் பறிமுதல் செய்யப்பட்டு உள்ளதாக போலீஸ் அதிகாரிகள் தெரிவித்தனர்.