பள்ளி மாணவியை மோட்டார் சைக்கிளில் கடத்தி சென்ற வாலிபரால் பரபரப்பு

தக்கோலத்தில் பள்ளி மாணவியை மோட்டார் சைக்கிளில் கடத்தி சென்ற வாலிபரை கிராமத்து இளைஞர்கள் மடக்கி பிடித்தனர். அவரை போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.
பள்ளி மாணவியை மோட்டார் சைக்கிளில் கடத்தி சென்ற வாலிபரால் பரபரப்பு
Published on

அரக்கோணம்,

அரக்கோணம் அருகே உள்ள தக்கோலம் பகுதியை சேர்ந்த 6 வயது பள்ளி மாணவி, அதே பகுதியில் உள்ள ஊராட்சி ஒன்றிய தொடக்க பள்ளியில் 2-ம் வகுப்பு படித்து வருகிறாள். நேற்று மாலை வகுப்பு முடிந்ததும் மாணவி வீட்டிற்கு செல்ல வெளியே வந்தாள். அப்போது வாலிபர் ஒருவர், அந்த மாணவியிடம் உன்னுடைய அம்மாவிற்கு உடல்நிலை சரியில்லை உன்னை அழைத்துவர சொன்னார்கள் என்று கூறியுள்ளார். இதனையடுத்த மாணவி, அவருடன் மோட்டார் சைக்கிளில் சென்றாள்.

தக்கோலத்தில் மாணவியின் வீட்டை கடந்து மோட்டார் சைக்கிள் சென்றபோது மாணவி எங்கள் வீடு இங்கே இருக்கிறது. வீட்டை தாண்டி சென்று கொண்டு இருக்கிறீர்கள் என்று வாலிபரிடம் கேட்டு உள்ளாள். வாலிபர் உன்னுடைய அம்மாவை மருத்துவமனையில் சேர்த்து உள்ளனர் என்று கூறி மருத்துவமனையை தாண்டி சென்று உள்ளார். இதனால் அதிர்ச்சி அடைந்த மாணவி கூச்சலிட்டாள். அப்போது மாணவி வசிக்கும் தெருவை சேர்ந்த இளைஞர்கள் சிலர் மோட்டார் சைக்கிளில் மாணவியை வேறு நபர் அழைத்து செல்வதை பார்த்து போலீசாருக்கு தகவல் தெரிவித்துவிட்டு பின்தொடர்ந்து சென்று உள்ளனர்.

மாணவியை கடத்தி சென்ற வாலிபர் மோட்டார் சைக்கிளை மத்திய தொழில் பாதுகாப்பு படை மையம் அருகே உள்ள டாஸ்மாக் கடை அருகே நிறுத்திவிட்டு மாணவியிடம் பிஸ்கெட், சாக்லெட் வாங்கி தருகிறேன் சத்தம் போடாதே என்று கூறி உள்ளார். ஆனால் மாணவி அழுவதை நிறுத்தவில்லை. அப்போது பின்தொடர்ந்து வந்த இளைஞர்கள் அங்கு சென்று வாலிபரை மடக்கி பிடித்தனர்.

இதனையடுத்து அங்கு வந்த அரக்கோணம் தாலுகா போலீஸ் இன்ஸ்பெக்டர் அண்ணாதுரை, தனிப்பிரிவு சப்-இன்ஸ்பெக்டர் சீனிவாசன் மற்றும் தக்கோலம் போலீசார் மாணவியை மீட்டனர்.

இதுகுறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து வாலிபரை கைது செய்து விசாரணை நடத்தினர். விசாரணையில் பிடிபட்டவர் தக்கோலம் பகுதியை சேர்ந்த துளசிராமன் (வயது 25) என்பதும், மப்பேடு பகுதியில் உள்ள ஒரு தனியார் தொழிற்சாலையில் பணிபுரிபவர் என்பதும் தெரியவந்தது. போலீசார் விரைந்து நடவடிக்கை எடுத்து மாணவியை மீட்டதால் பாலியல் பலாத்கார சம்பவம் எதுவும் நடைபெறாமல் தடுக்கப்பட்டது. மீட்கப்பட்ட மாணவி, பெற்றோரிடம் ஒப்படைக்கப்பட்டனர்.

சம்பவம் நடந்த ஒரு மணி நேரத்திற்குள் மாணவியை கடத்தி சென்ற வாலிபரை பிடித்த போலீசாரை அரக்கோணம் சரக போலீஸ் துணை சூப்பிரண்டு குத்தாலிங்கம் பாராட்டினார்.

இந்த சம்பவம் தக்கோலம் பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com