பழனி அருகே விபத்து, டிராக்டர் மீது சரக்கு வேன் மோதி சிறுவன் உள்பட 3 பேர் பலி

பழனி அருகே டிராக்டர் மீது சரக்குவேன் மோதியதில் சிறுவன் உள்பட 3 பேர் பலியாகினர்.
பழனி அருகே விபத்து, டிராக்டர் மீது சரக்கு வேன் மோதி சிறுவன் உள்பட 3 பேர் பலி
Published on

திண்டுக்கல்,

திண்டுக்கல் மாவட்டம் ஒட்டன்சத்திரம் விஸ்வ நாதன்நகரை சேர்ந்தவர் மூர்த்தி (வயது 45). வியாபாரி. இவர் ஒட்டன்சத்திரம் பகுதியில் இருந்து சோற்றுக்கற்றாழை, துடைப்பம் போன்றவற்றை கேரள மாநிலம் திருச்சூர் பகுதியில் உள்ள ஒரு நிறுவனத்துக்கு விற்பனை செய்து வந்தார். நேற்று முன்தினம் இரவு வழக்கம்போல் சோற்றுக்கற்றாழை மற்றும் துடைப்பங்களை ஒரு சரக்குவேனில் ஏற்றி கொண்டு திருச்சூருக்கு புறப்பட்டார்.

அந்த சரக்கு வேனை அதே பகுதியை சேர்ந்த ராஜா (25) என்பவர் ஓட்டினார். இவர்களுடன், அதே பகுதியை சேர்ந்த சின்ராஜ் மகன் அரசு (15) என்ற சிறுவனும் சென்றான். பழனி அருகேயுள்ள பாப்பம்பட்டியை அடுத்த சின்னாகவுண்டன்புதூர் பகுதியில் சரக்கு வேன் சென்று கொண்டிருந்தது. அப்போது திடீரென சரக்கு வேன் டிரைவரின் கட்டுப்பாட்டை இழந்து முன்னால் சென்ற டிராக்டர் மீது பயங்கரமாக மோதியது.

இந்த விபத்தில் சரக்கு வேனின் முன்பகுதி சுக்கு நூறாக நொறுங்கியது. மேலும் மோதிய வேகத்தில் டிராக்டரும் நிலைதடுமாறி கவிழ்ந்தது. இந்த விபத்தில் சரக்கு வேனின் இடிபாடுகளில் சிக்கி மூர்த்தி, அரசு ஆகியோர் சம்பவ இடத்திலேயே உடல் நசுங்கி பலியாகினர்.

மேலும் சரக்கு வேன் டிரைவர் ராஜா, டிராக்டர் டிரைவர் தர்மன் (32) ஆகியோர் படுகாயம் அடைந்தனர். இதற்கிடையே அக்கம்பக்கத்தினர் ஓடி வந்து விபத்தில் சிக்கியவர்களை மீட்கும் முயற்சியில் ஈடுபட்டனர். மேலும் தகவல் அறிந்ததும் பழனி தாலுகா போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்தனர்.

பின்னர் ராஜாவையும், தர்மனையும் மீட்டு சிகிச்சைக்காக பழனி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். ராஜா மேல்சிகிச்சைக்காக மதுரை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டார். ஆனால் வழியிலேயே அவர் பரிதாபமாக இறந்தார்.

இந்த விபத்து குறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

X

Daily Thanthi
www.dailythanthi.com