தர்மபுரி, கிருஷ்ணகிரி மாவட்டங்களில் விடுமுறை வழங்காத 82 நிறுவனங்கள் மீது நடவடிக்கை அதிகாரி தகவல்

தர்மபுரி, கிருஷ்ணகிரி மாவட்டங்களில் மே தின விடுமுறை வழங்காத 82 நிறுவனங்கள் மீது நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக அதிகாரி தெரிவித்தார்.
தர்மபுரி, கிருஷ்ணகிரி மாவட்டங்களில் விடுமுறை வழங்காத 82 நிறுவனங்கள் மீது நடவடிக்கை அதிகாரி தகவல்
Published on

கிருஷ்ணகிரி:

தர்மபுரி மற்றும் கிருஷ்ணகிரி மாவட்ட தொழிலாளர் உதவி ஆணையர் வெங்கடாசலபதி வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-

தமிழ்நாடு தேசிய பண்டிகை விடுமுறை சட்டம், உணவு நிறுவன சட்டம் மற்றும் மோட்டார் போக்குவரத்து தொழிலாளர் சட்டம் மற்றும் விதிகளின்படி தேசிய விடுமுறை தினமான தொழிலாளர் தினத்தன்று கடைகள், உணவு நிறுவனங்கள் மற்றும் மோட்டார் போக்குவரத்து நிறுவனங்கள் உள்ளிட்ட பல்வேறு நிறுவனங்களில் பணிபுரியும் தொழிலாளர்களுக்கு சம்பளத்துடன் கூடிய ஒரு நாள் விடுமுறை வழங்கப்பட வேண்டும். அவ்வாறு விடுமுறை வழங்காத பட்சத்தில் அன்றைய தினம் பணிக்கு அமர்த்தப்படும் தொழிலாளர்களுக்கு இரட்டிப்பு சம்பளம் அல்லது மாற்று விடுப்பு அனுமதித்து சம்பந்தப்பட்ட தொழிலாளர்களுக்கு அறிவிப்பு அளித்து அதன் நகலினை தொழிலாளர் துணை, உதவி ஆய்வாளர்களுக்கு அனுப்பி, விடுமுறை தினத்தன்று நிறுவனத்தில் அதனை காட்சிப்படுத்த வேண்டும். தொழிலாளர் தினத்தன்று கிருஷ்ணகிரி மற்றும் தர்மபுரி மாவட்டங்களில் தொழிலாளர் உதவி ஆணையர் வெங்கடாசலபதியின் தலைமையில் கடைகள், உணவு நிறுவனங்கள் மற்றும் மோட்டார் போக்குவரத்து நிறுவனங்கள் உள்ளிட்ட பல்வேறு நிறுவனங்களில் சிறப்பு ஆய்வு மேற்கொள்ளப்பட்டது. அப்போது 56 கடைகள், 55 உணவு நிறுவனங்கள் மற்றும் 9 போக்குவரத்து நிறுவனங்கள் என மொத்தம் 120 நிறுவனங்களில் ஆய்வு மேற்கொள்ளப்பட்டு சட்ட விதிமுறைகளை பின்பற்றாத 36 கடைகள், நிறுவனங்கள், 44 உணவு நிறுவனங்கள், 2 மோட்டார் போக்குவரத்து நிறுவனங்கள் என மொத்தம் 82 நிறுவனங்கள் மீது நடவடிக்கை எடுக்கப்பட்டது. இவ்வாறு அதில் தெரிவித்துள்ளார்.

X

Daily Thanthi
www.dailythanthi.com