தமிழக மீனவர் மீது துப்பாக்கி சூடு நடத்திய சிங்கள கடற்படையினரை கைது செய்ய நடவடிக்கை எடுக்க வேண்டும்

தமிழக மீனவர் மீது துப்பாக்கி சூடு நடத்திய சிங்கள கடற்படையினரை கைது செய்ய நடவடிக்கை எடுக்க வேண்டும் மத்திய-மாநில அரசுகளுக்கு டாக்டர் அன்புமணி ராமதாஸ் வேண்டுகோள்.
தமிழக மீனவர் மீது துப்பாக்கி சூடு நடத்திய சிங்கள கடற்படையினரை கைது செய்ய நடவடிக்கை எடுக்க வேண்டும்
Published on: 

சென்னை,

பா.ம.க. இளைஞர் அணி தலைவர் டாக்டர் அன்புமணி ராமதாஸ் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-

நாகப்பட்டினம் மாவட்டம் அக்கரைப்பேட்டையை சேர்ந்த மீனவர்கள் கோடியக்கரையில் இருந்து தென்கிழக்கில் 5 கடல் மைல் தொலைவில் மீன் பிடித்துக்கொண்டிருந்தபோது, அங்கு வந்த சிங்கள கடற்படையினர் தமிழக மீனவர்கள் மீது சரமாரியாக துப்பாக்கியால் சுட்டனர். இதில் படுகாயமடைந்த கலைச்செல்வன், நாகை ஆஸ்பத்திரியில் சிகிச்சைக்காக சேர்க்கப்பட்டுள்ளார். இலங்கை கடற்படையினரின் இந்த அத்துமீறல் கடுமையாக கண்டிக்கத்தக்கது.

வங்க கடலில் மீன்பிடிக்கச் செல்லும் தமிழக மீனவர்கள் மீது சிங்கள படையினர் தாக்குதல் நடத்துவதும், துப்பாக்கி சூடு நடத்துவதும் அண்மைக்காலமாக அதிகரித்து வருகிறது. கடந்த 2 மாதங்களில் மட்டும் 7 முறை தமிழக மீனவர்கள் மீது சிங்கள படையினர் தாக்குதல் நடத்தியுள்ளனர்.

இந்திய கடல் எல்லைக்குள் அத்துமீறி நுழையும் இலங்கை மீனவர்கள் யாரையும் இந்திய கடலோர காவல்படை தாக்குவதில்லை. மாறாக, அவர்களை கைது செய்து, கண்ணியமாக நடத்துகிறது. மாறாக, தமிழக மீனவர்களை சிங்கள படைகள் தாக்குவதும், துப்பாக்கியால் சுட்டு காயப்படுத்துவதும் இந்தியாவை சீண்டும் செயலாகும். இந்தியாவின் இறையாண்மைக்கு ஊறு விளைவிக்கக் கூடிய செயல்களை மத்திய அரசு வேடிக்கை பார்க்கக்கூடாது.

தமிழக மீனவர்களை சிங்கள கடற்படையினர் தாக்கியதற்காக இந்தியாவுக்கான இலங்கை தூதரை இந்திய வெளியுறவுத்துறை அழைத்து கண்டனம் தெரிவிக்க வேண்டும். கேரளத்தின் அரபிக்கடல் பகுதியில் தமிழக மீனவர்கள் 2 பேரை சுட்டுக்கொன்றதற்காக இத்தாலிய கடற்படையினரை கைது செய்ததைப் போன்று, இந்த விஷயத்திலும் தமிழக மீனவர் மீது துப்பாக்கி சூடு நடத்திய சிங்கள கடற்படையினரை உடனே கைது செய்ய மத்திய-மாநில அரசுகள் நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும்.

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

X

Follow us on Google
Daily Thanthi
www.dailythanthi.com