

விழுப்புரம் மாவட்டத்தில் கடந்த ஆண்டு 47 சதவீதம் பருவமழை குறைந்ததால் குடிநீர் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது. இதனை தடுக்க மாவட்ட நிர்வாகம் உரிய நடவடிக்கை எடுத்து வருகின்றன. இப்பிரச்சனை தொடர்பாக செல்போன் மூலம் பொதுமக்கள் புகார் தெரிவிக்கலாம் என்று அறிவுறுத்தப்பட்டுள்ளது.
20162017ம் ஆண்டில் வடகிழக்கு பருவமழை
விழுப்புரம் மாவட்டத்தில் வழக்கத்தை விட 47 சதவீதம் குறைவாக பெய்துள்ளதால் பல்வேறு ஊராட்சிகளில் நீர்மட்டம் குறைந்து வருவதாலும். கோடைக்காலங்களில் கடும் குடிநீர் பிரச்சனை ஏற்பட வாய்ப்புள்ளதால் இதனை தீர்க்க மாவட்ட நிர்வாகம் தற்போதையிலிருந்தே உரிய நடவடிக்கை எடுத்து வருகிறது. விழுப்புரம் மாவட்டத்தில் அனைத்து ஊரகப்பகுதிகளிலும் தடையின்றி குடிநீர் வழங்குவதை உறுதி செய்திட கலெக்டரால் செல்போன் எண் அறிவிக்கப்பட்டுள்ளது. ஒவ்வொரு ஊராட்சி ஒன்றியங்களுக்கும் துணை வட்டார வளர்ச்சி அலுவலர் செல்போன் எண் அறிவிக்கப்பட்டுள்ளது. ஊராட்சியில் ஏற்படும் குடிநீர் பிரச்சனை தொடர்பாக புகார் அளித்தால் அவர் உடனடியாக அதனை சரிசெய்ய உரிய நடவடிக்கை எடுப்பார்.
பொதுமக்களிடமிருந்து வரும் புகார்கள் தனிபதிவேடு தொடங்கி பதிவு செய்யப்படும். புகார்தாரர்களின் எண்களும் பதிவு செய்யப்படும். குடிநீர் பிரச்சனை பெரியஅளவில் செல்லாமல் ஆரம்பகட்டத்திலேயே அதனை சரிசெய்ய ஆட்சியர் உரிய நடவடிக்கை எடுத்துள்ளார். குடிநீர் விநியோகத்தில் ஏற்பட்டுள்ள பிரச்சனைகள், மின்மோட்டார் பழுது, குடிநீர் குழாய் உடைப்பு, நிலத்தடி நீர்மட்டம் குறைந்துசெல்வது, மின் இணைப்பு பழுது போன்ற நடவடிக்கைகளை கண்டறிந்து அதிகாரிகள் உடனடி நடவடிக்கை எடுக்கவும் ஆட்சியர் உத்தரவிட்டுள்ளார்.
காவல்துறை மூலம் நடவடிக்கை.....
வறட்சி நிலவிடும் சூழ்நிலையில் விழுப்புரம் மாவட்டத்தில் உள்ள அனைவருக்கும் தடையின்றி குடுநீர் வழங்கிட வேண்டியுள்ளதால் ஊராட்சியில் குடிநீர் தொட்டி கட்டி தண்ணீர் பிடித்தல், மோட்டார் வைத்து பொதுகுடிநீர் குழாயில் தண்ணீர் உறிஞ்சுதல்,தோட்டப்பயிர்களுக்கு தண்ணீர் பாய்ச்சுதல், பள்ளங்கள் தோண்டி தண்ணீர் பிடித்தல் போன்ற நடவடிக்கையில் யாரேனும் ஈடுபட்டால் அவர்கள் மீது காவல்துறை மூலம் நடவடிக்கை எடுக்கப்படும். அவ்வாறு முறையற்ற வகையில் தண்ணீர் எடுப்பவர்கள் தொலைபேசி மூலம் புகார் தெரிவிக்கலாம் என்றும் கலெக்டர் சுப்ரமணியன் அறிவித்துள்ளார்.