

ஈரோடு
கூட்டு பண்ணைய திட்டத்தில் 15 ஆயிரத்து 900 விவசாயிகள் சேர்க்கப்பட்டு உள்ளதாக வேளாண்மை இணை இயக்குனர் சின்னசாமி தெரிவித்து உள்ளார்.
கூட்டம்
கூட்டு பண்ணைய திட்டத்தின் கீழ் அமைக்கப்பட்டு உள்ள உழவர் உற்பத்தியாளர் குழுக்கள் மற்றும் வேளாண்மை எந்திரங்கள் விற்பனையாளர்களுக்கான ஆலோசனை கூட்டம் பெருந்துறை ஒழுங்குமுறை விற்பனைக்கூட மஞ்சள் வணிக வளாகத்தில் நடந்தது. கூட்டத்தில் மாவட்ட வேளாண்மை இணை இயக்குனர் சின்னசாமி கலந்துகொண்டு பேசினார். அப்போது அவர் கூறியதாவது:-
2017- 2018-ம் ஆண்டு முதல் 5 ஆண்டுகளாக கூட்டு பண்ணைய திட்டம் செயல்படுத்தப்பட்டு வருகிறது. ஒரே பருவத்தில், ஒரே பயிரை கூட்டாக சாகுபடி செய்தல், இடுபொருட்களை கூட்டாக கொள்முதல் செய்தல், நவீன தொழில்நுட்பங்களை பயன்படுத்துதல், தரமான விளைபொருட்களை உற்பத்தி செய்வது, மதிப்பு கூட்டி சந்தைப்படுத்துதல், கூட்டாக பயிர் காப்பீடு செய்தல் உள்ளிட்ட சிறப்பான நோக்கங்களுக்காக உழவர் உற்பத்தியாளர் குழு ஏற்படுத்தப்பட்டு விவசாயிகளுக்கு திறன் மேம்பாட்டு பயிற்சி அளிக்கப்படுகிறது.
தொகுப்பு நிதி
உற்பத்தியாளர் குழுக்கள் ஒருங்கிணைக்கப்பட்டு உழவர் உற்பத்தியாளர் நிறுவனங்களாக பதிவு செய்யப்பட்டு பல்வேறு வணிகப்பணிகள் மேற்கொள்ளப்படுகின்றன. ஈரோடு மாவட்டத்தில் இதுவரை வேளாண்மை துறையின் கீழ் 159 குழுக்கள் ஏற்படுத்தப்பட்டு 15 ஆயிரத்து 900 விவசாயிகள் உறுப்பினர்களாக சேர்க்கப்பட்டு உள்ளனர். இதுவரை ரூ.6 கோடியே 95 லட்சம் தொகுப்பு நிதியில் 700-க்கும் மேற்பட்ட எந்திரங்கள் வழங்கப்பட்டு உள்ளன. நடப்பு ஆண்டில் வேளாண்மைத்துறையின் கீழ் 20 உற்பத்தியாளர் குழுக்களும், தோட்டக்கலைத்துறையின் கீழ் 13 உற்பத்தியாளர் குழுக்களும் ஏற்படுத்தப்பட்டு ஒவ்வொரு குழுவுக்கும் ரூ.5 லட்சம் வீதம் தொகுப்பு நிதியாக ரூ.1 கோடியே 65 லட்சம் வழங்கப்பட உள்ளது.
இவ்வாறு வேளாண்மை இணை இயக்குனர் சின்னசாமி கூறினார்.
வேளாண்மை கருவிகள்
கூட்டத்தில் உழவர் பயிற்சி நிலைய வேளாண்மை துணை இயக்குனர் அ.நே.ஆசைத்தம்பி, வேளாண்மை பொறியியல் துறை செயற்பொறியாளர் வி.கே.விஸ்வநாதன், மாவட்ட கலெக்டரின் நேர்முக உதவியாளர் (வேளாண்மை) கே.முருகேசன், பெருந்துறை வேளாண்மை உதவி இயக்குனர் எல்.குழந்தைவேலு, தோட்டக்கலை உதவி இயக்குனர் நக்கீரன் மற்றும் உழவர் உற்பத்தியாளர் குழுக்களின் நிர்வாகிகள், வேளாண்மை எந்திர விற்பனை நிறுவனங்களின் பிரதிநிதிகள் உள்பட பலர் கலந்துகொண்டனர்.
இதில் வேளாண்மை கருவிகள் விவசாயிகளின் பார்வைக்கு வைக்கப்பட்டு இருந்தன. இந்த கருவிகளை வேளாண்மை இணை இயக்குனர் சின்னசாமி பார்வையிட்டார். முடிவில் உழவர் பயிற்சி நிலைய வேளாண்மை அதிகாரி சு.சுகன்யா நன்றி கூறினார்.