அஞ்சுகிராமம் அருகே அடுத்தடுத்து சம்பவம் ஓய்வு பெற்ற கண்டக்டர் வீடு உள்பட 2 இடங்களில் திருட்டு

அஞ்சுகிராமம் அருகே ஓய்வு பெற்ற கண்டக்டர் உள்பட 2 வீடுகளில் திருடிச்சென்ற மர்ம நபர்களை போலீசார் வலைவீசி தேடி வருகிறார்கள்.
அஞ்சுகிராமம் அருகே அடுத்தடுத்து சம்பவம் ஓய்வு பெற்ற கண்டக்டர் வீடு உள்பட 2 இடங்களில் திருட்டு
Published on

அஞ்சுகிராமம்,

ஓய்வு பெற்ற கண்டக்டர்

அஞ்சுகிராமத்தை அடுத்த ஜேம்ஸ் டவுன் பகுதியை சேர்ந்தவர் ராமானுஜம் (வயது 60). இவர் அரசு பஸ் கண்டக்டராக பணிபுரிந்து ஓய்வு பெற்றவர். இவரது மனைவி நெய்வேலியில் வேலை பார்த்து வருகிறார். இதனால் ராமானுஜம், கண்டக்டர் பணியில் இருந்து ஓய்வு பெற்றதும், வீட்டின் மேல் மாடியை வாடகைக்கு கொடுத்துவிட்டு மனைவியுடன் நெய்வேலியில் தங்கி இருந்தார்.

அவ்வப்போது ஊருக்கு வந்து செல்வது வழக்கம். இதனால் வீட்டின் கீழ் தளத்தில் ராமானுஜம் குடியிருந்த பகுதி எப்போதும் பூட்டியே கிடக்கும்.

திருட்டு

நேற்று காலை ராமானுஜம் வீட்டின் மேல் மாடியில் இருந்தவர்கள் கீழே இறங்கி வந்த போது, கீழ்தளத்தின் முன்பக்க கதவு உடைக்கப்பட்டு திறந்து கிடந்தது. அதிர்ச்சி அடைந்த அவர்கள் இது பற்றி நெய்வேலியில் இருந்த ராமானுஜத்திற்கு தகவல் கொடுத்தனர். அவர் உடனே அஞ்சுகிராமம் போலீசில் புகார் செய்யும்படியும், தான் உடனே கிளம்பி ஜேம்ஸ் டவுண் வருவதாகவும் கூறினார்.

இதையடுத்து போலீசார் ராமானுஜம் வீட்டுக்கு சென்று பார்த்தனர். அங்கு பொருள்கள் சிதறி கிடந்தன. இரவு யாரோ மர்ம நபர்கள் கதவை உடைத்து உள்ளே புகுந்து பொருட்களை திருடி சென்றுஉள்ளனர். இதில் என்னென்ன பொருள்கள் திருட்டு போனது என்பது ராமானுஜமிடம் விசாரித்த பின்னரே தெரியவரும் என போலீசார் தெரிவித்தனர்.

ஐ.டி.ஊழியர் வீடு

மேலும் ராமானுஜம் வீட்டில் இருந்து சில வீடுகள் தள்ளி குடியிப்பவர் சுதாகர் (43). சென்னையில் உள்ள தனியார் ஐ.டி.நிறுவனத்தில் ஊழியராக உள்ளார். இதனால் இவரது வீடும் பூட்டியே கிடந்தது.

இந்த வீட்டிலும் திருடர்கள் புகுந்து சில பொருட்களை திருடியுள்ளனர். திருடர்கள் கதவை உடைக்க முயன்ற போது சத்தம் கேட்டு பக்கத்து வீட்டில் வசிக்கும் முருகேசனும் மற்றும் அவரது மனைவியும் எழுந்து வெளியே வந்தனர். அவர்களை கண்டதும் திருடர்கள் ஓட்டம் பிடித்தனர்.

நேற்று காலையில் இச்சம்பவம் பற்றி சுதாகருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. அவரும் ஊருக்கு விரைந்து வந்து கொண்டிருக்கிறார். இந்த சம்பவம் குறித்தும் அஞ்சுகிராமம் போலீசில் புகார் செய்யப்பட்டு உள்ளது.

இந்த 2 திருட்டு சம்பவம் குறித்து அஞ்சுகிராமம் போலீசார் வழக்கு பதிவு செய்து கைவரிசை காட்டிய மர்ம ஆசாமிகளை வலைவீசி தேடிவருகிறார்கள்.

Related Stories

No stories found.
X

Daily Thanthi
www.dailythanthi.com