முக கவசம் அணியாததால் ஆத்திரம்: கோழிக்கடைக்காரரை ‘ஷூ’ காலால் மிதித்த போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் பணி இடைநீக்கம்

பெரும்பாக்கத்தில் முக கவசம் அணியாததால் கோழிக்கடைக்காரரை போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் ‘ஷூ’ காலால் மிதித்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியது. அவரை பணிஇடைநீக்கம் செய்து போலீஸ் இணை கமிஷனர் உத்தரவிட்டார்.
முக கவசம் அணியாததால் ஆத்திரம்: கோழிக்கடைக்காரரை ‘ஷூ’ காலால் மிதித்த போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் பணி இடைநீக்கம்
Published on

ஆலந்தூர்,

சென்னையை அடுத்த பெரும்பாக்கம் பகுதியில் பொதுமக்கள் மற்றும் கடை வியாபாரிகள் முககவசம் அணிந்து சமூக இடைவெளியுடன் பொருட்கள் வாங்குகிறார்களா? என்பதை கண்காணிக்க பெரும்பாக்கம் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் ஜான் போஸ்கோ மற்றும் போலீஸ்காரர் ஒருவர் ரோந்து பணியில் ஈடுபட்டு கொண்டிருந்தார்.

அப்போது அங்குள்ள கோழிக்கடை ஒன்றுக்கு சென்றபோது, அங்கு வேலை செய்யும் ஊழியர் முக கவசம் அணியாமல் இருந்ததாக கூறப்படுகிறது. இதைக்கண்ட போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் ஜான் போஸ்கோ ஏன் முககவசம் அணியவில்லை? என்று அவரிடம் கேட்டுள்ளார்.

இதில் கடை ஊழியருக்கும் அவருக்கும் இடையே கடும் வாக்குவாதம் ஏற்படவே, ஆத்திரமடைந்த சப்-இன்ஸ்பெக்டர் ஜான் போஸ்கோ கடை ஊழியரை திடீரென ஷூ காலால் மிதித்து தாக்கி விட்டு சென்றுள்ளார்.

சப்-இன்ஸ்பெக்டர் இடைநீக்கம்

இந்த சம்பவம் அங்குள்ள கண்காணிப்பு கேமராவில் பதிவானது. இந்த நிலையில் இச்சம்பவம் சமூக வலைத்தளங்களில் வேகமாக பரவி பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. போலீஸ்காரர் கடை ஊழியரை தாக்கிய காட்சியை கண்டு பொதுமக்களும், வியாபாரிகளும் இச்செயலுக்கு கண்டனம் தெரிவித்தனர். இந்த சம்பவம் குறித்து அறிந்த சென்னை தெற்கு போலீஸ் இணை கமிஷனர் நரேந்திரன் நாயர், பரங்கிமலை போலீஸ் துணை கமிஷனர் அருண் பாலகோபாலன் ஆகியோர் விசாரணை நடத்தினர்.

இதையடுத்து, கடை ஊழியரை ஷூ காலில் மிதித்து தாக்கியதாக போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் ஜான் போஸ்கோவை இடைநீக்கம் செய்து இணை கமிஷனர் நரேந்திரன் நாயர் உத்தரவிட்டார்.

Related Stories

No stories found.
X

Daily Thanthi
www.dailythanthi.com