கல்லூரி மாணவர்கள் 5 பேர் கைது

கடையில் பொருட்களை நொறுக்கிய கல்லூரி மாணவர்கள் 5 பேர் கைது செய்யப்பட்டனர்.
கல்லூரி மாணவர்கள் 5 பேர் கைது
Published on: 

ராமேசுவரம்,

ராமநாதபுரம் அருகே உள்ள தனியார் கல்லூரி ஒன்றில் இருந்து மாணவர்கள், கல்லூரி பஸ் மூலம் ராமேசுவரத்துக்கு நேற்று சுற்றுலா வந்தனர். அப்போது அந்த வாகனத்தில் வந்த மாணவர்கள் சிலருக்கும், கல்லூரி பஸ் டிரைவருக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டதாக கூறப்படுகிறது. தொடர்ந்து ராமேசுவரம் அருகே பேய்க்கரும்பில் கலாம் மணிமண்டபம் எதிரே பஸ் நிறுத்தப்பட்ட பின்னர், மாணவர்கள் மணிமண்டபத்தை சுற்றி பார்த்தனர். அப்போது அங்கு டீக்கடை ஒன்றில் டீ குடித்துக் கொண்டிருந்த கல்லூரி பஸ் டிரைவர் தவ முருகன் மீது மாணவர்கள் சிலர் தாக்குதல் நடத்தியதுடன் அந்த கடையில் இருந்த டேபிள் மற்றும் நாற்காலிகளை தூக்கி வீசி சேதப்படுத்தியதாக கூறப்படுகிறது.

டேபிள், நாற்காலிகளை உடைத்தது குறித்து கேட்ட அந்த கடையின் உரிமையாளரையும் மாணவர்கள் தாக்கியதாக கூறப்பட்டதை தொடர்ந்து, அந்த வியாபாரிக்கு ஆதரவாக அங்கு கடை வைத்துள்ள மற்ற சாலையோர வியாபாரிகள் சேர்ந்து மாணவர்களை கைது செய்ய வலியுறுத்தி சிறிது நேரம் தேசிய நெடுஞ்சாலையில் நின்று மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

இதுகுறித்து தகவல் அறிந்ததும் ராமேசுவரம் துணை போலீஸ் சூப்பிரண்டு தீபக் சிவாஜ் தலைமையிலான போலீசார் விரைந்து வந்தனர். போராட்டம் நடத்திய வியாபாரிகளிடம் பேச்சுவார்த்தை நடத்தியதை தொடர்ந்து மறியல் போராட்டத்தை கைவிட்டனர். டிரைவரை தாக்கி கடைகளில் இருந்த பொருட்களை சேதப்படுத்தியதாக கல்லூரி மாணவர்கள் 5 பேரை கைது செய்து, தங்கச்சிமடம் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். இந்த சம்பவம் அந்த பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியது.

X

Daily Thanthi
www.dailythanthi.com