உதவி கலெக்டர் அலுவலகத்தை தீப்பெட்டி தொழிலாளர்கள் முற்றுகை

சம்பள உயர்வு வழங்க வலியுறுத்தி நேற்று கோவில்பட்டி உதவி கலெக்டர் அலுவலகத்தை தீப்பெட்டி தொழிலாளர்கள் முற்றுகையிட்டனர்.
உதவி கலெக்டர் அலுவலகத்தை தீப்பெட்டி தொழிலாளர்கள் முற்றுகை
Published on

கோவில்பட்டி,

கோவில்பட்டி சுற்று வட்டார பகுதிகளில் 200-க்கும் மேற்பட்ட பகுதி எந்திர தீப்பெட்டி தொழிற்சாலைகள் உள்ளன. இங்கு பல ஆயிரக்கணக்கான தொழிலாளர்கள் பணியாற்றி வருகின்றனர். இந்த தொழிலாளர்களுக்கு கடந்த 7 ஆண்டுகளாக சம்பள உயர்வு வழங்கப்படவில்லை.

எனவே இந்த தொழிலாளர்களுக்கு உரிய சம்பள உயர்வு வழங்க வேண்டும். பி.எப்., இ.எஸ்.ஐ. வசதி செய்து தர வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி, தொடர் போராட்டங்களில் ஈடுபட்டு வருகின்றனர்.

இந்த நிலையில் தீப்பெட்டி தொழிலாளர்களின் கோரிக்கைகளை வலியுறுத்தி, அனைத்து தொழிற்சங்கத்தினர் நேற்று காலையில் கோவில்பட்டி உதவி கலெக்டர் அலுவலகத்தை முற்றுகையிட்டனர். அண்ணா தொழிற்சங்க செயலாளர் ராமகிருஷ்ணன், தீப்பெட்டி தொழிலாளர் சங்கம் கற்பகவல்லி, ஐ.என்.டி.யு.சி தலைவர் மகேந்திரன், துணை தலைவர் பிச்சையா, மாவட்ட பொதுச்செயலாளர் ராஜசேகரன், ஏ.ஐ.டி.யு.சி. மாவட்ட செயலாளர் தமிழரசன், ஏ.ஐ.சி.சி.டி.யு. பொன்ராஜ் மற்றும் தீப்பெட்டி தொழிலாளர்கள் திரளாக கலந்து கொண்டனர்.

பின்னர் அவர்கள், உதவி கலெக்டர் அனிதாவிடம் கோரிக்கை மனு வழங்கினர். தொடர்ந்து தொழிலாளர் நலத்துறை ஆய்வாளர் பாலமுருகன், உதவி ஆய்வாளர் விசுவநாதன், அலுவலர் சுடலைசெல்வம் ஆகியோரை உதவி கலெக்டர் அனிதா வரவழைத்து பேச்சுவார்த்தை நடத்தினார்.

அப்போது தொழிலாளர் நலத்துறை அதிகாரிகள் கூறுகையில், தீப்பெட்டி உற்பத்தியாளர்களுடன் பேச்சுவார்த்தை நடத்தி, வருகிற 23-ந்தேதிக்குள் தீப்பெட்டி தொழிலாளர்களுக்கு உரிய சம்பள உயர்வு வழங்க ஏற்பாடு செய்வதாக உறுதி அளித்தனர். இதையடுத்து அனைவரும் கலைந்து சென்றனர்.

X

Daily Thanthi
www.dailythanthi.com