உதவி கலெக்டர் அலுவலகத்தை தீப்பெட்டி தொழிலாளர்கள் முற்றுகை

சம்பள உயர்வு வழங்க வலியுறுத்தி, கோவில்பட்டி உதவி கலெக்டர் அலுவலகத்தை தீப்பெட்டி தொழிலாளர்கள் முற்றுகையிட்டனர்.
உதவி கலெக்டர் அலுவலகத்தை தீப்பெட்டி தொழிலாளர்கள் முற்றுகை
Published on

கோவில்பட்டி,

தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டி சுற்று வட்டார பகுதிகளில் 200-க்கு மேற்பட்ட தீப்பெட்டி தொழிற்சாலைகள் உள்ளன. இங்கு பல ஆயிரக்கணக்கான தொழிலாளர்கள் வேலை செய்து வருகின்றனர். தீப்பெட்டி தொழிலாளர்களுக்கு கடந்த 7 ஆண்டுகளாக சம்பள உயர்வு வழங்கப்படவில்லை.

எனவே தீப்பெட்டி தொழிலாளர்களுக்கு சம்பள உயர்வு வழங்க வேண்டும். அரசு அறிவித்துள்ள குறைந்தபட்ச சம்பளத்தை பஞ்சப்படியுடன் சேர்த்து உடனடியாக பாக்கி தொகைகளுடன் வழங்க வேண்டும் என்று வலியுறுத்தி, தீப்பெட்டி தொழிலாளர்கள் நேற்று காலையில் கோவில்பட்டி உதவி கலெக்டர் அலுவலகத்தை முற்றுகையிட்டனர்.

இந்திய கம்யூனிஸ்டு மாவட்ட செயலாளர் அழகுமுத்து பாண்டியன் தலைமை தாங்கினார். தாலுகா செயலாளர் பாபு, துணை செயலாளர் ராமகிருஷ்ணன், நகர செயலாளர் சரோஜா, துணை செயலாளர் முனியசாமி, மாவட்ட குழு உறுப்பினர் பரமராஜ், நகர துணை செயலாளர் அலாவுதீன், நகர குழு உறுப்பினர் ஜோசப் மற்றும் தீப்பெட்டி தொழிலாளர்கள் திரளாக கலந்து கொண்டனர்.

பின்னர் அவர்கள், உதவி கலெக்டர் அலுவலக தலைமை எழுத்தர் ரகுபதியிடம் கோரிக்கை மனு வழங்கி விட்டு, கலைந்து சென்றனர்.

X

Daily Thanthi
www.dailythanthi.com