குறைந்த விலையில் மகாடா வீடு வாங்கி தருவதாக ரூ.71 லட்சம் மோசடி செய்தவர் கைது

பெண் உள்பட மேலும் 3 பேரை போலீசார் வலைவீசி தேடி வருகின்றனர்.
குறைந்த விலையில் மகாடா வீடு வாங்கி தருவதாக ரூ.71 லட்சம் மோசடி செய்தவர் கைது
Published on: 

மும்பை,

குறைந்த விலையில் மகாடா வீடு வாங்கி தருவதாக ரூ.71 லட்சம் மோசடி செய்தவர் கைது செய்யப்பட்டார். இதில் தொடர்புடைய ஒரு பெண் உள்பட மேலும் மூன்று பேரை போலீசார் தேடி வருகின்றனர்.

மும்பை அந்தேரியில் மராட்டிய வீட்டு வசதி மற்றும் மேம்பாட்டு ஆணையமான மகாடா கட்டும் குறைந்த விலை வீட்டை வாங்க அந்த பகுதியை சேர்ந்த ஒருவர் விரும்பினார். இந்த நிலையில், அவருக்கு கீதா லான்கே என்ற பெண் மற்றும் நிதேஷ் லோடன்கர், கவுசல் ஷா, திலிப் சேத் ஆகிய நான்கு பேர் அறிமுகமாகி உள்ளனர். இதில் கீதா லான்கே தன்னை மகாடா ஊழியர் என அறிமுகப்படுத்தி இருக்கிறார். பின்னர் அவர்கள் தங்களால் மகாடாவில் மிக குறைந்த விலையில் வீடு வாங்கி தர முடியும் என தெரிவித்து உள்ளனர்.

மேலும் மகாடா கட்டும் அடுக்குமாடி கட்டிடத்தில் ஒரு வீட்டை காட்டி அதை வாங்கி தருவதாக கூறியுள்ளனர். அவர்களின் ஆசை வார்த்தைகளை நம்பிய அந்த நபர் வீட்டை வாங்குவதற்காக ரூ.71 லட்சம் கொடுத்துள்ளார். ஆனால் அவர்கள் கூறியபடி அவருக்கு வீடு வாங்கி கொடுக்கவில்லை. இதனால் தான் ஏமாற்றப்படுவதை உணர்ந்த அந்த நபர் போலீசில் புகார் கொடுத்தார்.

அதன்பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து நிதேஷ் லோடன்கரை கைது செய்தனர். பின்னர் அவர் கோர்ட்டில் ஆஜர்படுத்தப்பட்டு போலீஸ் காவலில் ஒப்படைக்கப்பட்டார். பெண் உள்பட மற்ற மூன்று பேரும் தலைமறைவாகி விட்டனர். போலீசார் அவர்களை வலைவீசி தேடி வருகின்றனர்.

X

Daily Thanthi
www.dailythanthi.com