சாலையோர தடுப்பில் மோட்டார்சைக்கிள் மோதல் பிளஸ்-1 மாணவர்கள் 2 பேர் பலி

சாலையோர தடுப்பில் மோட்டார்சைக்கிள் மோதிய விபத்தில் பிளஸ்-1 மாணவர்கள் 2 பேர் பரிதாபமாக இறந்தனர்.
சாலையோர தடுப்பில் மோட்டார்சைக்கிள் மோதல் பிளஸ்-1 மாணவர்கள் 2 பேர் பலி
Published on

பூந்தமல்லி,

பூந்தமல்லியை அடுத்த காட்டுப்பாக்கம் அம்மன் நகரைச் சேர்ந்தவர் ராஜேந்திரன். இவருடைய மகன் தேவா (வயது 18). அதே காட்டுப்பாக்கம், பிள்ளையார் கோவில் தெருவைச் சேர்ந்தவர் வீரா. இவருடைய மகன் தினேஷ் (18).

நண்பர்களான தேவா, தினேஷ் இருவரும் அய்யப்பன்தாங்கலில் உள்ள அரசு பள்ளியில் பிளஸ்-1 படித்து வந்தனர். கொரோனாவால் பள்ளிகளுக்கு விடுமுறை விடப்பட்டு உள்ளதால் தற்போது இருவரும் போரூரில் உள்ள தனியார் நிறுவனத்தில் பகுதிநேர வேலைக்கு சென்று வந்தனர்.

நேற்று அதிகாலை 5 மணி அளவில் நண்பர்கள் இருவரும் ஒரே மோட்டார்சைக்கிளில் வழக்கம்போல் வேலைக்கு சென்றனர். மோட்டார் சைக்கிளை தேவா ஓட்டினார். அவருக்கு பின்னால் தினேஷ் அமர்ந்து இருந்தார்.

போரூர் மேம்பாலம் அருகே சென்றபோது திடீரென நிலைதடுமாறிய மோட்டார் சைக்கிள், சாலையோர தடுப்பில் மோதி விபத்துக்குள்ளானது. இதில் படுகாயம் அடைந்த நண்பர்களான தேவா, தினேஷ் இருவரும் அதே இடத்தில் பரிதாபமாக இறந்தனர்.

இது குறித்து பூந்தமல்லி போக்குவரத்து புலனாய்வு பிரிவு போலீசார் வழக்குப்பதிவு செய்து பலியான இருவரது உடல்களையும் மீட்டு பிரேத பரிசோதனைக்காக கீழ்ப்பாக்கம் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்து மேலும் விசாரித்து வருகின்றனர்..

X

Daily Thanthi
www.dailythanthi.com