தூத்துக்குடியில் கந்து வட்டிக்காக பெண், குடும்பத்தினர் மீது தாக்குதல்

தூத்துக்குடியில் கந்துவட்டி கேட்டு கடன் வாங்கிய பெண் மற்றும் குடும்பத்தினரை தாக்கிய தந்தை, மகன் உள்பட 4 பேர் மீது போலீசார் வழக்குப்பதிவு சய்து விசாரித்து வருகின்றனர்
தூத்துக்குடியில் கந்து வட்டிக்காக பெண், குடும்பத்தினர் மீது தாக்குதல்
Published on

தூத்துக்குடி:

தூத்துக்குடியில் கந்துவட்டி கேட்டு கடன் வாங்கிய பெண் மற்றும் குடும்பத்தினரை தாக்கிய தந்தை-மகன் உள்பட 4 பேர் மீது போலீசார் வழக்குப்பதிவு சய்து விசாரித்து வருகின்றனர்.

ரூ.20 லட்சம் கடன்

தூத்துக்குடி போல்பேட்டையை சேர்ந்தவர் வேல்முருகன். இவருடைய மனைவி கன்னியம்மாள் (வயது 49). இவர் தனசேகரன் நகரை சேர்ந்த மனோகரன் (57) என்பவரிடம், குடும்ப செலவுக்காக பல்வேறு தவணைகளாக ரூ.20 லட்சம் வரை பணம் வாங்கினாராம். இதற்காக வாரம் தோறும் வட்டி செலுத்தி வந்தார். இதுவரை ரூ.16 லட்சத்து 64 ஆயிரம் வட்டி செலுத்தினாராம். கடந்த 2 வாரமாக வட்டி செலுத்தவில்லை என்று கூறப்படுகிறது.

கந்து வட்டிக்காக தாக்குதல்

இதனால் ஆத்திரம் அடைந்த மனோகரன், தனது வீட்டுக்கு கன்னியம்மாள், கணவர் வேல்முருகன் மற்றும் அவர்களது மூத்த மகளையும் வரவழைத்து அவதூறாக பேசினாராம். தொடர்ந்து மனோகரன், அவரது மகன் விக்னேஷ் (24), உறவினர்கள் குப்பம்மாள் (62), அஜய் (45) ஆகியோர் சேர்ந்து கன்னியம்மாள், அவரது கணவர், மகள் ஆகிய 3 பேரையும் தாக்கினார்களாம்.

இது குறித்து கன்னியம்மாள் தூத்துக்குடி சிப்காட் போலீசில் புகார் தெரிவித்தார். அதன்பேரில் போலீசார் மனோகரன், விக்னேஷ், குப்பம்மாள், அஜய் ஆகிய 4 பேர் மீதும் கந்து வட்டி வசூலித்ததாக வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

X

Daily Thanthi
www.dailythanthi.com