

பெங்களூரு, டிச.26-
கர்நாடகத்தில் கொரோனா மற்றும் ஒமைக்ரான் பரவலை தடுப்பது குறித்து நிபுணர்களுடன், முதல்-மந்திரி பசவராஜ் பொம்மை இன்று(ஞாயிற்றுக்கிழமை) முக்கிய ஆலோசனை நடத்த உள்ளார். இதில் இரவுநேர ஊரடங்கை அமல்படுத்துவது பற்றி முடிவு எடுக்கப்படுகிறது.
தமிழகத்தில் பரவியது
நாட்டிலேயே கர்நாடக மாநிலம் பெங்களூருவில் தான் புதிய வகை கொரோனாவான ஒமைக்ரான் வைரஸ் கால் பதித்திருந்தது.அதன்பிறகு, ஒமைக்ரான் வைரஸ் தமிழ்நாடு, மராட்டியம் உள்ளிட்ட பல்வேறு மாநிலங்களில் பரவ தொடங்கியது. கர்நாடகத்தில் 30-க்கும் மேற்பட்டோர் ஒமைக்ரான் பாதிப்புக்கு உள்ளாகி இருக்கிறார்கள். நாடு முழுவதும் 400-க்கும் மேற்பட்டோர் ஒமைக்ரான் வைரஸ் பாதிப்புக்கு உள்ளாகி இருப்பதாக மத்திய அரசு அறிவித்துள்ளது.
நாடு முழுவதும் கொரோனா மற்றும் ஒமைக்ரான் வைரஸ் பரவி வருவதால் வெளிநாடுகளில் இருந்து வரும் பயணிகளை தீவிரமாக கண்காணிக்கவும், முன் எச்சரிக்கை நடவடிக்கைகளை எடுக்கும்படியும் ஒவ்வொரு மாநிலத்திற்கும், மத்திய சுகாதாரத்துறை உத்தரவிட்டுள்ளது. குறிப்பாக ஒமைக்ரான் பரவலை தடுக்க இரவு நேர ஊரடங்கு உள்ளிட்ட கடுமையான கட்டுப்பாடுகளை விதிக்கும்படியும் மாநில அரசுகளுக்கு, மத்திய அரசு உத்தரவிட்டு இருக்கிறது.
கொரோனா பரவலும் அதிகரிப்பு
இதையடுத்து, மத்திய பிரதேச மாநிலத்தில் ஒருவருக்கு கூட ஒமைக்ரான் வைரஸ் பாதிப்புக்கு உள்ளாகாமல் இருந்தாலும், அங்கு ஊரடங்கு அமல்படுத்தப்பட்டு இருக்கிறது. உத்தரபிரதேச மாநிலத்திலும் இரவு நேர ஊரடங்கு அமலுக்கு வந்திருக்கிறது. இந்த நிலையில், பெங்களூரு உள்பட கர்நாடகத்திலும் கொரோனா பாதிப்பும், ஒமைக்ரான் வைரஸ் பரவலும் மெல்ல, மெல்ல அதிகரித்து வருகிறது. இதுவரை 300 பேருக்கு சராசரியாக கொரோனா பாதிப்பு ஏற்பட்டு வந்தது.
நேற்று முன்தினம் 400 பேர் கொரோனா பாதிப்புக்கு உள்ளாகி இருந்தார்கள். அதே நேரத்தில் ஒமைக்ரான் பாதித்தவர்களுடன் தொடர்பில் இருந்தவர்கள் கண்டுபிடிக்கப்பட்டு, அவர்களும் ஒமைக்ரான் வைரஸ் பாதிப்புக்கு உள்ளாகி இருக்கிறார்களா? என்பதை கண்டறிய பரிசோதனை நடைபெற்று வருகிறது. அந்த பரிசோதனை அறிக்கை வந்ததும் கர்நாடகத்தில் ஒமைக்ரான் வைரஸ் பாதித்தவர்களின் எண்ணிக்கை மேலும் உயர வாய்ப்புள்ளது.
முக்கிய ஆலோசனை
இந்த நிலையில், கர்நாடகத்தில் கொரோனா பரவல் மற்றும் ஒமைக்ரான் பரவலை தடுக்கவும், இதற்காக எடுக்க வேண்டிய முன் எச்சரிக்கை நடவடிக்கைகள் குறித்தும் நிபுணர்கள் மற்றும் மந்திரிகளுடன், முதல்-மந்திரி பசவராஜ் பொம்மை இன்று(ஞாயிற்றுக்கிழமை) காலை 9 மணிக்கு பெங்களூருவில் முக்கிய ஆலோசனை நடத்த உள்ளார்.
இந்த ஆலோசனையின் போது கொரோனா பரவலை தடுக்க புத்தாண்டு கொண்டாட்டத்திற்கு புதிய கட்டுப்பாடுகள் விதிப்பது குறித்து பசவராஜ் பொம்மை விரிவாக ஆலோசனை நடத்த உள்ளார். அதன்பிறகு, புத்தாண்டு கொண்டாட்டத்திற்காக தனியாக வழிகாட்டு நெறிமுறைகளை வெளியிடவும் அரசு முடிவு செய்திருப்பதாக தகவல்கள் வெளியாகி உள்ளன.
இரவு நேர ஊரடங்கு?
அதே நேரத்தில் கொரோனா மற்றும் ஒமைக்ரான் பரவலை தடுக்க மத்திய அரசு, இரவு நேர ஊரடங்கு உள்ளிட்ட கடுமையான கட்டுப்பாடுகளை அமல்படுத்தும்படி உத்தரவிட்டுள்ளதால், அது பற்றியும் நிபுணர் குழுவினருடன் முதல்-மந்திரி பசவராஜ் பொம்மை ஆலோசனை நடத்தி இறுதி முடிவு எடுக்க உள்ளார். நிபுணர்கள் குழு அளிக்கும் பரிந்துரைகள்படி, அடுத்தக்கட்ட நடவடிக்கைகளை எடுக்க அரசு தீர்மானித்துள்ளது.
குறிப்பாக இரவுநேர ஊரடங்கை அமல்படுத்தவும் அரசு முடிவு செய்திருப்பதாகவும் தகவல்கள் வெளியாகி உள்ளன. ஏனெனில் புத்தாண்டு கொண்டாட்டத்தின் போது பொதுமக்கள் ஒரே இடத்தில் கூட்டமாக கூட வாய்ப்புள்ளதால், அதன்மூலம் கொரோனா பரவல் அதிகரிக்கலாம் என்பதால் இரவு நேர ஊரடங்கை அமல்படுத்துவது குறித்து அரசு ஆலோசித்து வருவதாகவும் தெரிகிறது.
கடும் கட்டுப்பாடுகள்
அதாவது இரவு 11 மணி முதல் காலை 6 மணிவரை இரவு நேர ஊரடங்கு அமல்படுத்தப்படலாம் என்ற தகவல்கள் வெளியாகி உள்ளது. அத்துடன் மாநிலத்தில் முக்கியமான சுற்றுலா தலங்கள் அமைந்துள்ள பெங்களூரு, தட்சிண கன்னடா, உத்தர கன்னடா, உடுப்பி, சிக்கமகளூரு, குடகு, சிவமொக்கா உள்ளிட்ட மாவட்டங்களில் புத்தாண்டையொட்டி கடும் கட்டுப்பாடுகளை பிறப்பிக்க அரசு தீர்மானித்து இருப்பதாகவும் கூறப்படுகிறது.
இதுதவிர பெங்களூரு, மங்களூரு, மைசூரு, பெலகாவி, கலபுரகியில் விமான நிலையங்கள் இருப்பதால், அங்கு முன் எச்சரிக்கை நடவடிக்கைகளுடன், கட்டுப்பாடுகளையும் தீவிரப்படுத்த அரசு தயாராகி வருவதாக சொல்லப்படுகிறது. இந்த விவகாரம் குறித்து தார்வார் மாவட்டம் உப்பள்ளியில் நேற்று முதல்-மந்திரி பசவராஜ் பொம்மை நிருபர்களுக்கு அளித்த பேட்டியின் போது கூறியதாவது:-
முன்எச்சரிக்கை நடவடிக்கைகளும்...
உப்பள்ளியில் இருந்து நாளை(அதாவது இன்று) பெங்களூருவுக்கு செல்ல உள்ளேன். அங்கு சென்ற உடன் முதற்கட்டமாக கொரோனா மற்றும் ஒமைக்ரான் பரவலை தடுக்க எடுக்க வேண்டிய நடவடிக்கைகள் குறித்து நிபுணர்கள் குழுவினர், பெங்களூரு மாநகராட்சி கமிஷனர் மற்றும் உயர் அரசு அதிகாரிகளுடன் ஆலோசனை நடத்த உள்ளேன். நிபுணர்கள் குழு அளிக்கும் பரிந்துரைகள்படி மாநிலத்தில் கொரோனா பரவலை தடுக்க தேவையான நடவடிக்கைகளை அரசு எடுக்கும். கர்நாடகத்திற்கு மராட்டியம் மற்றும் கேரள மாநிலங்களால் தான் கொரோனா பரவல் ஆதங்கம் இருந்து வந்தது.