நீர்பிடிப்பு பகுதியில் மழை: பவானிசாகர் அணைக்கு நீர்வரத்து அதிகரிப்பு

நீர்பிடிப்பு பகுதியில் மழை பெய்து வருவதால் பவானிசாகர் அணைக்கு நீர் வரத்து அதிகரித்துள்ளது.
நீர்பிடிப்பு பகுதியில் மழை: பவானிசாகர் அணைக்கு நீர்வரத்து அதிகரிப்பு
Published on

பவானிசாகர்

நீர்பிடிப்பு பகுதியில் மழை பெய்து வருவதால் பவானிசாகர் அணைக்கு நீர் வரத்து அதிகரித்துள்ளது.

பவானிசாகர் அணை

தென்னிந்தியாவின் மிகப் பெரிய மண் அணை என்ற பெருமையும், தமிழகத்தின் 2-வது பெரிய அணை என்ற பெருமையும் கொண்டது பவானிசாகர் அணை. இந்த அணையின் மொத்த நீர்மட்ட உயரம் 105 அடி என கணக்கிடப்படுகிறது. இந்த அணையின் மொத்த நீர் பிடிப்பு கொள்ளளவு 32.8 டி.எம்.சி ஆகும். நீலகிரி மலைப்பகுதியில் இருந்து வரும் பவானி ஆறும், கூடலூர் மலைப்பகுதியிலிருந்து வரும் மோயாறும் பவானிசாகர் அணைக்கு நீர்வரத்து ஆதாரங்களாக விளங்குகிறது. பவானிசாகர் அணையிலிருந்து திறக்கப்படும் தண்ணீரால் ஈரோடு, திருப்பூர், கரூர் மாவட்டங்களை சேர்ந்த சுமார் 2 லட்சத்து 50 ஆயிரம் ஏக்கர் விவசாய நிலங்கள் பாசன வசதி பெறுகிறது. இதுதவிர ஈரோடு மாவட்டத்தின் முக்கிய குடிநீர் ஆதாரமாக விளங்குவது பவானிசாகர் அணை.

நீர்வரத்து அதிகரிப்பு

தற்போது பவானிசாகர் அணையின் நீர்பிடிப்பு பகுதியான நீலகிரி மலைப்பகுதியில் பரவலாக மழை பெய்து வருகிறது. இதனால் அணைக்கு வரும் நீரின் அளவு அதிகரித்துள்ளது. நேற்று முன்தினம் மாலை 4 மணிக்கு பவானிசாகர் அணைக்கு நீர் வரத்து வினாடிக்கு 5,832 கன அடியாக இருந்தது.

நேற்று மாலை 4 மணியளவில் அணைக்கு வரும் தண்ணீரின் அளவு வினாடிக்கு 7,322 கன அடியாக அதிகரித்தது. பவானி ஆற்றில் வினாடிக்கு 5,500 கனஅடி உபரி நீரும், கீழ் பவானி வாய்க்காலில் வினாடிக்கு 1,800 கன அடி உபரி நீரும் மொத்தம் அணையில் இருந்து வினாடிக்கு 7,300 கன அடி உபரி தண்ணீர் திறக்கப்படுகிறது. அணையின் நீர்மட்டம் 104 அடியாக நீடிக்கிறது. அணையில் திறக்கப்படும் உபரிநீரின் அளவு எப்போது வேண்டுமானாலும் அதிகரிக்கலாம் என்பதால் பவானி ஆற்றின் கரையோரம் வசிக்கும் மக்களுக்கு பொதுப்பணி துறை மற்றும் வருவாய் துறை சார்பாக வெள்ள அபாய எச்சரிக்கை விடப்பட்டுள்ளது.

Related Stories

No stories found.
X

Daily Thanthi
www.dailythanthi.com