ஜல்லிக்கட்டு மீதான தடையை நீக்கிய மத்திய, மாநில அரசுக்கு நன்றி

ஜல்லிக்கட்டு மீதான தடையை நீக்கிய மத்திய, மாநில அரசுக்கு நன்றி தெரிவிப்பதாக ஈரோட்டில் ஜல்லிக்கட்டு ஒருங்கிணைப்புக்குழுவினர் கூறினார்கள்.
ஜல்லிக்கட்டு மீதான தடையை நீக்கிய மத்திய, மாநில அரசுக்கு நன்றி
Published on

ஜல்லிக்கட்டு போராட்டம்

ஜல்லிக்கட்டுக்கு ஆதரவாக ஈரோட்டில் கடந்த 18-ந் தேதி மாணவ-மாணவிகள் போராட்டக்களத்தில் இறங்கினார்கள். அவர்கள் பகலும், இரவும் ஈரோடு வ.உ.சி. பூங்கா மைதானத்தில் உள்ளிருப்பு போராட்டம் நடத்தினார்கள். அவர்களுடைய போராட்டத்தை ஒருங்கிணைத்து கொண்டு சென்ற ஜல்லிக்கட்டு ஒருங்கிணைப்புக்குழுவை சேர்ந்த கைலாசபதி, பாலமுருகன், ராஜேந்திரன், நடராஜ் ஆகியோர் நிருபர்களுக்கு நேற்று பேட்டி அளித்தனர்.

அப்போது அவர்கள் கூறியதாவது:-

ஜல்லிக்கட்டுக்கு ஆதரவாக 6 நாட்களாக மாணவ-மாணவிகள் தொடர் போராட்டம் நடத்தினார்கள். இந்த போராட்டத்திற்கு முழுமையான ஒத்துழைப்பு கொடுத்த காவல்துறைக்கு நன்றியை தெரிவித்துக்கொள்கிறோம். ஈரோடு மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு ஆர்.சிவக்குமாரும், மாவட்ட கூடுதல் போலீஸ் சூப்பிரண்டுகள் மற்றும் போலீசார் முழுமையாக ஒத்துழைத்தனர்.

அரசுக்கு நன்றி

மாணவ-மாணவிகளின் கோரிக்கைளை ஏற்று உடனடியாக அவசர சட்டத்தை கொண்டு வந்து ஜல்லிக்கட்டுக்கான தடையை நீக்கிய தமிழக அரசுக்கும், மத்திய அரசுக்கும் நன்றியை தெரிவித்துக்கொள்கிறோம். இதேபோல் போராட்டத்தில் ஈடுபட்டவர்களுக்கு தேவையான பொருட்களை தந்து உதவிய தன்னார்வலர்களுக்கும் நன்றி சொல்ல கடமைப்பட்டு உள்ளோம்.

தமிழக அரசு ஜல்லிக்கட்டு தடையை நீக்க நடவடிக்கை எடுத்ததால் கடந்த 23-ந் தேதி காலையில் நாங்கள் போராட்டத்தை வாபஸ் பெற்றுக்கொண்டோம். அப்போது பெரும்பாலான மாணவ-மாணவிகள் அங்கிருந்து கலைந்து சென்றுவிட்டனர். ஆனால் சிலர் வ.உ.சி. பூங்காவை விட்டு வெளியேறாமல் தொடர்ந்து போராட்டத்தில் ஈடுபட்டனர். அப்போது அவர்களை கலைந்து செல்லுமாறு போலீசார் பலமுறை கேட்டுக்கொண்டனர்.

சிலைக்கு மாலை

ஒரு சிலர் தூண்டுதல் காரணமாக மாணவர்களின் போராட்டம் திசை மாறியது. இதனால் போலீசாரின் தடியடியில் பலர் படுகாயம் அடைந்ததாக சமூக வலைதளங்களில் தகவல் பரவியது. இதனால் நாங்கள் சுமார் 15 பேர் சம்பவத்தன்று ஒவ்வொரு ஆஸ்பத்திரியாக சென்று பார்த்தோம். ஒரே ஒரு மாணவிக்கு காலில் லேசான காயம் ஏற்பட்டு பஸ் நிலையம் அருகில் உள்ள ஒரு தனியார் ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டு இருந்தார். அவரைத்தவிர மற்ற யாருக்கும் காயம் ஏற்படவில்லை. வ.உ.சி. பூங்கா மைதானத்தில் கையை அறுத்துக்கொண்ட வாலிபர் சிகிச்சை பெற்று வீடு திரும்பினார்.

இவ்வாறு அவர்கள் கூறினார்கள். இதைத்தொடர்ந்து ஜல்லிக்கட்டு ஒருங்கிணைப்புக்குழுவினர் ஈரோடு ரெயில் நிலையம் அருகில் உள்ள காளை மாட்டு சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார்கள்.

Related Stories

No stories found.
X

Daily Thanthi
www.dailythanthi.com