கோவில் பூட்டை உடைத்து 3 உண்டியல்கள் திருட்டு

கோவில் பூட்டை உடைத்து 3 உண்டியல்களை மர்ம நபர்கள் திருடிச்சென்றனர்.
கோவில் பூட்டை உடைத்து 3 உண்டியல்கள் திருட்டு
Published on

தா.பழூர்:

அரியலூர் மாவட்டம் தா.பழூர் அருகே கூத்தங்குடி கிராமத்தில் உள்ள இளங்காச்சியம்மன் கோவிலில் கடந்த ஆண்டு கும்பாபிஷேகம் நடைபெற்றது. இதைத்தொடர்ந்து அந்த கோவில் உண்டியல்கள் திறக்கப்படாமல் இருந்து வந்தது. இந்நிலையில் நேற்று கூத்தங்குடி அருகே உள்ள பாலசுந்தரபுரம் பகுதியில் பொன்னாற்று பாசன வாய்க்காலில் குடம் ஒன்று மிதந்து வந்துள்ளது. அதனை அப்பகுதி மக்கள் எடுத்து பார்த்தபோது அது கோவில் உண்டியல் என்பது தெரியவந்தது. அந்த உண்டியலில் இளங்காச்சியம்மன் கோவில் உண்டியல் என்று எழுதப்பட்டு இருந்ததை பார்த்து கோவில் நிர்வாகிகளுக்கு தகவல் கொடுத்தனர். இதையடுத்து அங்கு சென்று கோவில் உண்டியலை பெற்றுக்கொண்ட நிர்வாகிகள், அது தங்கள் கோவில் உண்டியல்தான் என்பதை உறுதி செய்தனர். பின்னர் கோவிலுக்கு சென்று பார்த்தபோது கோவில் பூட்டு உடைக்கப்பட்டு உள்ளே வைக்கப்பட்டிருந்த 3 உண்டியல்கள் திருட்டு போனது தெரியவந்தது. அந்த உண்டியல்களில் சுமார் 60 ஆயிரம் ரூபாய் இருந்திருக்கலாம் என்று அப்பகுதி மக்கள் தெரிவித்தனர்.

மேலும் இந்த சம்பவம் குறித்து தா.பழூர் போலீசாருக்கு கோவில் நிர்வாகிகள் தகவல் தெரிவித்தனர். அதன்பேரில் அங்கு வந்த போலீசார் கோவிலை பார்வையிட்டு விசாரித்து வருகின்றனர். 3 உண்டியல்களில் ஒரு உண்டியலில் இருந்த பணம் திருடப்பட்டு ஆற்றில் மிதந்து வந்த நிலையில், மற்ற 2 உண்டியல்களை எங்கு திருடர்கள் வீசிச்சென்றனர் என்பது உடனடியாக தெரியவில்லை. கூத்தங்குடி கிராமத்தில் இதுவரை திருட்டு சம்பவம் எதுவும் நடைபெற்றது இல்லை என்று அப்பகுதி மக்கள் தெரிவித்தனர். இந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Related Stories

No stories found.
X

Daily Thanthi
www.dailythanthi.com