

கொட்டாம்பட்டி,
கொட்டாம்பட்டியில் விவசாய இலவச மின் இணைப்புக்கு ரூ.5,500 லஞ்சம் வாங்கிய மின்வாரிய பொறியாளர் அதிரடியாக கைது செய்யப்பட்டார்.
ரூ.5,500 லஞ்சம்
மதுரை மாவட்டம் கொட்டாம்பட்டியில் உள்ள மின்வாரிய அலுவலகத்தில் இளநிலை மின் பாறியாளர் பணியாற்றி வந்தவர்,, தங்கமுனியாண்டி (வயது 39). இவர் மதுரையை சேர்ந்தவர் ஆவார்.
கொட்டாம்பட்டியை சேர்ந்த விவசாயி கோபாலகிருஷ்ணன், தனது மனைவி முருகேசுவரி பெயரில் இலவச விவசாய மின் இணைப்பு கோரி விண்ணப்பித்து இருந்தார். இதுசம்பந்தமாக ஆய்வு செய்து சான்று வழங்க இளநிலை மின்பொறியாளர் தங்கமுனியாண்டி ரூ.5,500 லஞ்சம் கேட்டுள்ளார்.
கைது
லஞ்சம் கொடுக்க விரும்பாத கோபாலகிருஷ்ணன் இதுகுறித்து மதுரை லஞ்ச ஒழிப்பு போலீசில் புகார் அளித்தார். அதன்பேரில் லஞ்ச ஒழிப்பு போலீசார் ரசாயனம் தடவிய பண நோட்டுகளை தங்க முனியாண்டியிடம் கொடுத்தனர். இதை தொடர்ந்து நேற்று கொட்டாம்பட்டி மின்வாரிய அலுவலகத்திற்கு வந்த கோபாலகிருஷ்ணன், அந்த பணத்தை தங்கமுனியாண்டியிடம் வழங்கினார். அப்போது அங்கு மறைந்து நின்றிருந்த லஞ்ச ஒழிப்பு போலீஸ் துணை சூப்பிரண்டு சத்யசீலன் தலைமையிலான போலீசார் கையும் களவுமாக தங்கமுனியாண்டியை கைது செய்தனர். .இதனையடுத்து அவரிடம் 3 மணி நேரம் விசாரணை நடத்தினர். இந்த சம்பவத்தால் அந்த பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது.