

தஞ்சாவூர்;
ஆந்திராவில் இருந்து ரெயிலில் கடத்தி வரப்பட்டு தஞ்சையில் ஒரு வீட்டில் பதுக்கி வைத்திருந்த ரூ.30 லட்சம் மதிப்பிலான 100 கிலோ கஞ்சாவை போலீசார் பறிமுதல் செய்தனர். இது தொடர்பாக 4 பரை கைது செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.
கஞ்சா புழக்கம்
வெளிமாநிலங்களில் இருந்து கஞ்சா கடத்தி வரப்பட்டு தஞ்சை மாவட்டத்தில் விற்பனை செய்யப்படுவதாகவும், மாவட்டம் முழுவதும் கஞ்சா புழக்கம் அதிகமாக இருப்பதாகவும் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு ரவளிபிரியாவுக்கு தகவல் கிடைத்தது. இதனையடுத்து கஞ்சா கடத்தலையும், விற்பனையையும் தடுத்து நிறுத்த வேண்டும் என மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு உத்தரவு பிறப்பித்தார்.
இதனையடுத்து போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் ராஜேஷ்குமார், சிறப்பு சப்-இன்ஸ்பெக்டர் மோகன், ஏட்டு உமாசங்கர், போலீஸ்காரர்கள் அருண்மொழி, அழகுசுந்தரம், நவீன், சுஜித் ஆகியோர் கொண்ட தனிப்படையினர் கடந்த 10 நாட்களாக தீவிர கண்காணிப்பு பணியில் ஈடுபட்டு வந்தனர்.
ரூ.30 லட்சம் கஞ்சா பறிமுதல்
இந்த நிலையில் தஞ்சை கொடிமரத்துமூலை பகுதியில் உள்ள ஒரு வீட்டில் கஞ்சா பதுக்கி வைத்து இருப்பதாக தனிப்படையினருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. அதன்பேரில் சப்-இன்ஸ்பெக்டர் ராஜேஷ்குமார் தலைமையிலான தனிப்படையினர் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று அந்த வீட்டில் அதிரடி சோதனை நடத்தினர்.
அப்போது அங்கு 100 கிலோ கஞ்சா பதுக்கி வைக்கப்பட்டிருந்தது கண்டுபிடிக்கப்பட்டது. இவற்றின் மதிப்பு ரூ.30 லட்சம் ஆகும். இந்த கஞ்சாவை தனிப்படையினர் பறிமுதல் செய்ததுடன் இது தொடர்பாக திருச்சி காந்தி மார்க்கெட் பகுதியை சேர்ந்த கவுதம் (24), தஞ்சாவூர் பார்வதி நகரை சேர்ந்த பூமிநாதன்(58), பட்டுக்கோட்டை பாரதி நகரை சேர்ந்த குமார்(38), ஓடிசா மாநிலத்தைச் சேர்ந்த தீபக் ரஞ்சனாஞ்சன்(33) ஆகியோரை பிடித்தனர்.
4 பேர் கைது
பின்னர் கஞ்சாவையும், பிடிபட்டவர்களையும் தஞ்சை மேற்கு போலீஸ் நிலையத்தில் தனிப்படையினர் ஒப்படைத்தனர். இது தொடர்பாக போலீசார் வழக்குப்பதிவு செய்து 4 பேரையும் கைது செய்தனர்.
இது குறித்து தனிப்படை போலீசார் கூறும்போது, ஆந்திராவில் இருந்து ரெயில் மூலம் மதுரைக்கு கொஞ்சம், கொஞ்சமாக கஞ்சாவை கடத்தி வந்து அங்கிருந்து தஞ்சைக்கு கொண்டு வரப்பட்டு பூமிநாதன் வீட்டில் பதுக்கி வைத்துள்ளனர். பின்னர் இந்த கஞ்சாவை தஞ்சை மாவட்டம் முழுவதும் விற்பனைக்கு அனுப்பி வைத்துள்ளனர். தற்போது 4 பேர் சிக்கியுள்ளனர். இந்த கடத்தலில் இவர்கள் தவிர வேறு யாருக்கெல்லாம் தொடர்பு இருக்கிறது? என விசாரணை நடத்தப்பட்டு வருகிறது என்றனர்.