தூத்துக்குடி அருகே மோட்டார் சைக்கிள் மீது கார் மோதல்; வாலிபர் பலி

மோட்டார் சைக்கிள் மீது கார் மோதல் வாலிபர் பலி
தூத்துக்குடி அருகே மோட்டார் சைக்கிள் மீது கார் மோதல்; வாலிபர் பலி
Published on

தூத்துக்குடி:

தூத்துக்குடி அருகே, மோட்டார்சைக்கிள் மீது கார் மோதியதில் வாலிபர் பலியானார்.

தொழிலாளி

தூத்துக்குடி மாவட்டம் ஸ்ரீவைகுண்டம் அருகே வடக்கு காருசேரி கண்டியல் தெருவைச் சேர்ந்த மூக்கன் மகன் ராமன் (வயது 34). கூலி தொழிலாளி. இவரது மனைவி சண்முகபிரியா. இவர்களுக்கு சுபாஷினி, மோனிஷா என்ற 2 மகள்கள் உள்ளனர். நேற்று முன்தினம் ராமனும், அவரது மாமா மகனான வடக்கு காருசேரியைச் சேர்ந்த வடிவேல் மகன் ராஜமணியும் (29) கறி வாங்குவதற்காக வல்லநாட்டுக்கு மோட்டார் சைக்கிளில் சென்று கொண்டிருந்தனர்.

பலி

பொட்டலூரணி விலக்கு அருகே மோட்டார் சைக்கிள் சென்றபோது வாகைக்குளத்தைச் சேர்ந்த சிவகுருநாதன் மகன் சக்தி கணேஷ் என்பவர் ஓட்டி வந்த கார், மோட்டார் சைக்கிள் மீது மோதியது. இதில் ராமன், ராஜமணி ஆகியோர் படுகாயம் அடைந்தனர். மோட்டார் சைக்கிள் மீது மோதிய கார் ரோட்டில் 3 முறை உருண்டது. அதில் பயணம் செய்த சக்தி கணேஷ், ரமேஷ் ஆகியோரும் படுகாயம் அடைந்தனர். காரில் இருந்த மற்றொருவரான கோபால் என்பவர் அதிர்ஷ்டவசமாக காயமின்றி தப்பினார்.

ராஜமணிக்கு காயம் அதிகமாக இருந்ததால் அவர் 108 ஆம்புலன்ஸ் மூலம் தூத்துக்குடி அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டார். ஆனால் வழியிலேயே அவர் இறந்தார்.

ராமன் மற்றும் காரில் வந்து படுகாயமடைந்த சக்திகணேஷ், ரமேஷ் ஆகியோரை நெல்லை அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் சேர்த்தனர். அங்கு அவர்களுக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இதுகுறித்து புதுக்கோட்டை போலீஸ் இன்ஸ்பெக்டர் ரமேஷ் விசாரணை நடத்தி வருகிறார்.

Related Stories

No stories found.
X

Daily Thanthi
www.dailythanthi.com