

திண்டுக்கல்,
திண்டுக்கல் மாவட்டம் ஒட்டன்சத்திரத்தில் டி.டி.வி.தினகரன் ஆதரவாளர் இல்ல திருமணவிழா நேற்று நடந்தது. இதில் கலந்து கொள்வதற்காக, கர்நாடக மாநிலம் பெங்களூருவில் இருந்து டி.டி.வி.தினகரனின் ஆதரவாளர் புகழேந்தி நேற்று காலை காரில் புறப்பட்டார். காரை அவருடைய டிரைவர் மேத்யூ ஓட்டினார்.
இதையடுத்து வழியில் கிருஷ்ணகிரி மாவட்டம் ஓசூரில் நண்பர்கள் மற்றும் ஆதரவாளர்களை புகழேந்தி சந்தித்து பேசினார். பின்னர் அங்கிருந்து ஒட்டன்சத்திரத்துக்கு தனது நண்பரான சேலத்தை சேர்ந்த ஜெயராஜ் என்பவரையும் அழைத்து கொண்டு அவர் புறப்பட்டார். இவர்கள் வந்த கார், திண்டுக்கல்-தாடிக்கொம்பு சாலையில் கலெக்டர் அலுவலகம் அருகே வந்து கொண்டிருந்தது.
கலெக்டர் அலுவலகத்தை அடுத்துள்ள அஞ்சலி ரவுண்டானா மேம்பாலத்தில் சென்றபோது கார், திடீரென டிரைவரின் கட்டுப்பாட்டை இழந்தது. இதனால் இடதுபக்க தடுப்புச்சுவரில் மோதி கார் கவிழ்ந்தது. இதில் புகழேந்திக்கு தோள்பட்டைகளில் காயம் ஏற்பட்டது. அதேபோல் ஜெயராஜ், டிரைவர் மேத்யூ ஆகியோரும் லேசான காயம் அடைந்தனர். இதைத்தொடர்ந்து 3 பேரும் திண்டுக்கல்லில் உள்ள ஒரு தனியார் மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்க்கப்பட்டனர்.
அங்கு அவர்களுக்கு சிகிச்சை அளிக்கப்பட்டது. இந்த சம்பவம் பற்றி கேள்விப்பட்டதும் புகழேந்தி உள்ளிட்டோரை பார்ப்பதற்காக டி.டி.வி.தினகரனின் ஆதரவாளர்கள் மருத்துவமனையில் குவிந்தனர். இதனால் அங்கு சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது. இதற்கிடையே மேல் சிகிச்சைக்காக புகழேந்தி கோவைக்கு அழைத்து செல்லப்பட்டார். இந்த விபத்து குறித்து தாடிக்கொம்பு போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.