தென்காசியில் ஊரடங்கை மீறிய 568 பேர் மீது வழக்கு; 110 வாகனங்கள் பறிமுதல்

தென்காசியில் ஊரடங்கை மீறியதாக 568 பேர் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்து, 110 வாகனங்களையும் பறிமுதல் செய்தனர்.
தென்காசியில் ஊரடங்கை மீறிய 568 பேர் மீது வழக்கு; 110 வாகனங்கள் பறிமுதல்
Published on

தென்காசி, மே:

தென்காசி மாவட்டத்தில் ஊரடங்கை மீறியதாக 2 நாட்களில் 568 வழக்குகள் பதிவு செய்யப்பட்டு 110 வாகனங்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன.

தீவிர கண்காணிப்பு

தற்போது கொரோனாவின் 2-வது அலை வீசி வருகிறது. இதனை கட்டுப்படுத்த முழு ஊரடங்கை அரசு அமல்படுத்தியுள்ளது. அதன்படி காலை 6 மணி முதல் 10 மணி வரை மளிகை காய்கறி மற்றும் இறைச்சி கடைகள் திறக்கலாம் என்றும் அதன்பிறகு அனைத்து கடைகளும் அடைக்கப்பட்டு முழு ஊரடங்கு அமல்படுத்த அரசு உத்தரவிட்டுள்ளது. வாகனங்கள் போக்குவரத்துக்கும் தடை விதிக்கப்பட்டுள்ளது.

இந்த நிலையில் தென்காசி மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு சுகுணா சிங் உத்தரவின்பேரில் மாவட்டம் முழுவதும் சோதனை சாவடிகள் அமைக்கப்பட்டு அங்கு போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு வருகிறார்கள். அவர்கள் தீவிர கண்காணிப்பு நடத்தி வருகிறார்கள். சாலையில் முகக் கவசம் அணியாமல் வருபவர்கள், கடைகளில் சமூக இடைவெளி இல்லாமல் கூட்டமாக நிற்பவர்கள் மற்றும் உரிய காரணங்கள் இல்லாமல் வாகனங்களில் சுற்றுபவர்கள் ஆகியோரை விசாரணை நடத்தி அரசு விதிமுறைகளை மீறி இருந்தால் அவர்கள் மீது வழக்கு பதிவு செய்து அபராதம் விதிக்கிறார்கள்.

இ- பதிவு முறை

தென்காசி நகரிலும் முக்கிய இடங்கள் அனைத்திலும் போலீசார் இந்த பணியில் ஈடுபட்டு வருகிறார்கள். நகர எல்லையில் தடுப்புகள் அமைக்கப்பட்டு மாவட்டத்திற்குள் வரும் வாகனங்களை விசாரித்து உரிய ஆவணங்களை கேட்டு நடவடிக்கை எடுக்கிறார்கள். மேலும் கடந்த 17-ம் தேதி முதல் இ-பதிவு முறை செயல்பாட்டில் உள்ளது. அதன்படி இ-பதிவு இல்லாமல் வரும் வாகனங்கள் மீதும் நடவடிக்கை எடுக்கப்படுகிறது.

இவ்வாறு நடவடிக்கை எடுத்ததில் கடந்த 2 நாட்களில் தென்காசி மாவட்டத்தில் ஊரடங்கு மற்றும் கொரோனா தடுப்பு விதிமுறைகளை மீறியதாக 568 வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளது. மேலும் 110 வாகனங்களை போலீசார் பறிமுதல் செய்துள்ளனர்.

இதுபற்றி மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு சுகுணா சிங் கூறுகையில், இந்த நடவடிக்கை தொடர்ந்து நடைபெறும். நோயின் தாக்கத்தை கட்டுப்படுத்த உரிய காரணங்கள் இல்லாமல் பொதுமக்கள் வீட்டை விட்டு வெளியே வராமல் போலீசாருக்கு ஒத்துழைப்பு அளிக்க வேண்டும் என்றார்.

Related Stories

No stories found.
X

Daily Thanthi
www.dailythanthi.com