

மதுரை
குடியுரிமை திருத்தச்சட்டம் குறித்து வாசலில் கோலம் போட்ட விவகாரம் தொடர்பாக, தி.மு.க. மீது அவதூறாக வீடியோ வெளியிட்டதாக யூ-டியூப் பிரபலம் மாரிதாஸ் மீது நடவடிக்கை எடுக்கும்படி தூத்துக்குடி தி.மு.க. மாணவர் அணியை சேர்ந்த உமரிசங்கர் என்பவர் தூத்துக்குடி மாவட்ட மாஜிஸ்திரேட்டு கோர்ட்டில் வழக்கு தொடர்ந்திருந்தார். இந்த வழக்கினை ரத்து செய்யக்கோரி, மாரிதாஸ் மதுரை ஐகோர்ட்டில் மனுதாக்கல் செய்தார்.
அதில், "என் மீது உமரி சங்கர் வழக்கு தொடர முகாந்திரம் இல்லை. எனவே என் மீது தொடரப்பட்ட வழக்கை ரத்து செய்து உத்தரவிட வேண்டும்" என கூறியிருந்தார்.
இந்த மனு ஏற்கனவே விசாரணைக்கு வந்தபோது மனுதாரர் தரப்பில், "மாரிதாஸ் ஒரு அரசியல் விமர்சகர். கருத்து சுதந்திரத்தின் கீழ் பேசி உள்ளார். உமரிசங்கர் குறித்து ஏதும் பேசவில்லை. உமரி சங்கருக்கு இந்த வழக்கை கோர்ட்டில் தாக்கல் செய்ய எந்த முகாந்திமும் இல்லை. எனவே இந்த வழக்கை ரத்து செய்து உத்தரவிட வேண்டும்" என வாதிடப்பட்டது. இதையடுத்து நீதிபதி வழக்கின் தீர்ப்பினை ஒத்திவைத்திருந்தார். இந்தநிலையில் நேற்று இந்த வழக்கின் தீர்ப்பை நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் பிறப்பித்தார். அதில், மாரிதாஸ் மீது தொடரப்பட்ட வழக்கை ரத்து செய்து உத்தரவிடப்பட்டு உள்ளது.