

புதுச்சேரி
சுகாதார சீர்கேடு
புதுச்சேரி, உழவர்கரை ஆகிய நகராட்சி பகுதிகளில் மட்டுமின்றி, பல்வேறு கொம்யூன் பஞ்சாயத்திற்குட்பட்ட பகுதிகளில் சேகரிக்கப்படும் குப்பைகள் குருமாம்பேட் குப்பைக் கிடங்கில் குவிக்கப்பட்டு வருகிறது. மர்ம நபர்களால் இந்த குப்பைகளுக்கு தீவைக்கப்படுவதால் குருமாம்பேட்டையை சுற்றியுள்ள பகுதிகளில் சுகாதார சீர்கேடு ஏற்படுகிறது.
இதை கண்டித்து அந்த பகுதியை சேர்ந்த பொதுமக்கள் போராட்டம் நடத்தினர். இது தொடர்பாக கவர்னர் கிரண்பெடியிடம் புகார் தெரிவித்தனர். அவர் குரும்பாபேட்டில் உள்ள குப்பைக் கிடங்கிற்கு சென்று ஆய்வு செய்தார். போலீசார் அதிகாரிகளை அழைத்து குப்பைகளை தீ வைக்கும் நபர்களை கண்டுபிடித்து அவர்கள் மீது சட்டப்படி நடவடிக்கை எடுக்கும்படி உத்தரவிட்டார்.
இந்தநிலையில் அந்த குப்பை கிடங்கு கடந்த 9ம் தேதி எதிர்பாராத விதமாக தீப்பிடித்து எரிந்தது. இதில் பெரிய அளவில் புகை வந்தது. இதனை கண்டித்து பெரம்பை பகுதியை சேர்ந்த பொதுமக்கள் புதுச்சேரி, விழுப்புரம் சாலையில் உள்ள பெரம்பையில் மறியல் போராட்டம் நடத்தினர். இதனால் அங்கு பெரும் பரபரப்பு ஏற்பட்டது.
இதனை தொடர்ந்து குப்பைகள் எரிவது தொடர்பாக தீயணைப்பு வீரர்களுக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. உடனே தீயணைப்பு வீரர்கள் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று தீயை அணைத்து வருகின்றனர். கடந்த 4 நாட்களாக இரவு, பகலாக தொடர்ந்து தீயை அணைக்கும் பணி நடந்து வருகிறது.
இந்தநிலையில் டெல்லி, ஏனாம், ஐதராபாத் ஆகிய பகுதிகளுக்கு சென்று இருந்த கவர்னர் கிரண்பெடி நேற்று காலை குருமாம்பேட் குப்பை கிடங்கிற்குச் சென்று ஆய்வு மேற்கொண்டார். அப்போது எதனால் தீ விபத்து ஏற்பட்டது? தீ ஏற்படாமல் பாதுகாக்க முடியாதா? நான் உத்தரவிட்டபடி குப்பைகளை தரம் பிரித்து மறு சுழற்சி பயன்பாட்டிற்கு கொண்டு வருவதற்கான நடவடிக்கை எடுக்காதது ஏன்? என்று அதிகாரிகளிடம் சராமாரியாக கேள்விகளை எழுப்பினர்.
இதனால் பதில் கூற முடியாமல் அதிகாரிகள் திகைத்தனர். குப்பைகளில் எரியும் தீயை அணைக்க போர்க்கால அடிப்படையில் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று அதிகாரிகளுக்கு உத்தரவிட்டார். இந்த ஆய்வின் போது கவர்னரின் சிறப்பு செயலாளர் தேவநீதிதாஸ், சீனியர் போலீஸ் சூப்பிரண்டு ராஜீவ் ரஞ்சன், உழவர்கரை நகராட்சி ஆணையர் ரமேஷ் மற்றும் அதிகாரிகள் பலர் உடனிருந்தனர்.
கவச உடைகள் இல்லாமல் தீயணைப்பு வீரர்கள் அவதி
குப்பை மேட்டில் தீயை அணைக்கும் பணியில் ஈடுபட்ட தீயணைப்பு வீரர் ஒருவர் கூறியதாவது:
குப்பைக் கிடங்குகளில் கடந்த 4 நாட்களாக தொடர்ந்து வேலை செய்து வருகிறோம். குப்பைகள் எரிவதால் துர்நாற்றம் வீசுகிறது. இதனால் சுவாசிக்க முடியவில்லை. வாந்தி, மயங்கம் ஏற்படுகிறது. ஆனால் எங்களுக்கு தேவையான கவச உடைகள் கிடையாது. கடலில், குளத்தில், சாக்கடையில் எங்காவது, யாராவது விழுந்து இறந்து விட்டால் அந்த உடலை நாங்கள் தான் மீட்கிறோம். ஆனால் எங்களுக்கு கை உறை கிடையாது. எங்களுக்கு எந்த ஒரு கவச உடைகளும் இல்லாமல் அவதிப்பட்டு வருகிறோம்.
இந்த குப்பையில் தற்போது புதுவை முழுவதும் உள்ள தீயணைப்பு நிலையங்களில் இருந்து வந்து 9 வண்டிகள் வேலை செய்து வருகிறது. சமீபத்தில் ரூ.12 கோடி செலவில் புதுவை தீயணைப்பு துறைக்கு நவீன தீயணைப்பு வண்டி வாங்கப்பட்டது. அந்த ஒரு வண்டியின் மூலமே இந்த குப்பை மேட்டில் எரியும் தீயை அணைத்து விட முடியும் ஆனால் அந்த வண்டியை எடுக்காமல் நிலையத்திலேயே நிறுத்தி வைத்துள்ளனர்.
இவ்வாறு அவர் கூறினார்.