கடலில் மூழ்கிய தரைப்பாலத்தில் வெளியே தெரிந்த சிமெண்டு குழாய்கள்

57 ஆண்டுகளுக்கு முன்பு தனுஷ்கோடியில் கடலில் மூழ்கிய தரை பாலத்தின் சிமெண்டு குழாய்கள் கடல் நீரோட்டத்தின் வேகத்தால் வெளியே தெரிகின்றன.
கடலில் மூழ்கிய தரைப்பாலத்தில் வெளியே தெரிந்த சிமெண்டு குழாய்கள்
Published on

ராமேசுவரம்

57 ஆண்டுகளுக்கு முன்பு தனுஷ்கோடியில் கடலில் மூழ்கிய தரை பாலத்தின் சிமெண்டு குழாய்கள் கடல் நீரோட்டத்தின் வேகத்தால் வெளியே தெரிகின்றன.

தரைப்பாலம்

ராமேசுவரம் அருகே உள்ளது புயலால் அழிந்து போன தனுஷ்கோடி பகுதி. அதுபோல் 1964-ம் ஆண்டுக்கு முன்பு வரையிலும் தனுஷ்கோடி பகுதியானது ரயில்வே நிலையம், பள்ளிக் கூடம், தபால் நிலையம், மருத்துவமனை உள்ளிட்ட அனைத்து வசதிகளுடன் இருந்து வந்துள்ளது. தனுஷ்கோடியில் இருந்து இலங்கையின் தலைமன்னாருக்கு கப்பல் போக்குவரத்தும் நடைபெற்று வந்தது. அதுபோல் ராமேசுவரத்திலிருந்து தனுஷ்கோடி வரையிலும் சாலை வசதியும் இருந்துள்ளது. அதிலும் குறிப்பாக எம்.ஆர்.சத்திரம் கடற்கரையில் இருந்து தனுஷ்கோடி வரையிலும் கடற்கரை மணல் பரப்பு பகுதியில் தரைப்பாலம் போன்று சாலை இருந்துள்ளது.

வடக்கு மற்றும் தெற்கு பகுதியில் உள்ள இரண்டு கடலும் ஒன்று சேரும் வகையில் தரைப்பாலம் அமைக்கப்பட்டு அதன் மீது பொதுமக்கள் சென்று வந்துள்ளனர். இவ்வளவு சிறப்பு வாய்ந்த தனுஷ்கோடி நகரமானது கடந்த 1964-ம் ஆண்டு டிசம்பர் மாதம் 23- ந் தேதி நள்ளிரவில் ஏற்பட்ட கடும் புயலால் முற்றிலும் அழிந்து போனது. இந்தப் புயலில் சாலை மற்றும் ரயில் தண்டவாளங்கள் முழுமையாக சேதமடைந்தது.

வெளியே தெரிந்தன

இந்த நிலையில் ராமேசுவரம் அருகே உள்ள தனுஷ்கோடி பகுதியில் கடந்த சில நாட்களாகவே கடல் சீற்றம் அதிகமாக இருந்து வருவதுடன் கடல் நீரோட்டத்தின் வேகமும் அதிகமாக இருந்து வருகின்றது. கடல் சீற்றம் மற்றும் நீரோட்டத்தின் வேகத்தால் ஏற்பட்டுள்ள கடல் அரிப்பால் எம்.ஆர்.சத்திரம் மற்றும் கம்பிப்பாடு பகுதிக்கும் இடைப்பட்ட பகுதியில் கடலில் மூழ்கிய தரைப்பாலத்தின் பெரிய சிமெண்டு குழாய்கள் சில தெளிவாக வெளியே தெரிந்து வருகின்றன. இவ்வாறு தனுஷ்கோடி பகுதியில் கடலில் மூழ்கி வெளியே தெரிந்து வரும் சாலையோடு கூடிய தரைப்பாலத்தின் சிமெண்டு குழாய்களை அப்பகுதியை சேர்ந்த மீனவர்கள் ஆச்சரியத்தோடு பார்த்து செல்கின்றனர்.

ஏற்கனவே கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு இதே பகுதியில் கடல் அரிப்பால் கடலில் மூழ்கியிருந்த தரைப்பாலத்தின் சிமெண்டு குழாய்கள் அனைத்தும் முழுமையாக வெளியே தெரிந்தது என்பது குறிப்பிடத்தக்கது

Related Stories

No stories found.
X

Daily Thanthi
www.dailythanthi.com