

வடகிழக்கு பருவமழை
தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை பொய்த்துபோனதால் கடும் வறட்சி ஏற்பட்டுள்ளது. பெரும்பாலான மாவட்டங்களில் தண்ணீர் இல்லாமல் விவசாய பயிர்கள் கருகின. இதனை பார்த்த அதிர்ச்சியில் விவசாயிகள் பலர் மரணமடைந்தனர். மேலும் சில விவசாயிகள் தற்கொலையும் செய்து கொண்டனர்.
விழுப்புரம் மாவட்டத்தில் 2 லட்சத்து 51 ஆயிரத்து 51 ஏக்கர் அளவில் சாகுபடி செய்யப்பட்டிருந்த விவசாய பயிர்கள் வறட்சியால் பாதிக்கப்பட்டன.
இதன் காரணமாக ஏற்பட்ட அதிர்ச்சியில் மரணம் ஏற்பட்டும், மனவேதனையால் தற்கொலை செய்தும் 10 விவசாயிகள் இறந்துள்ளனர்.
மத்திய குழுவினர் ஆய்வு
இந்த நிலையில் தமிழகத்தில் வறட்சியால் பாதிக்கப்பட்ட பகுதிகளை பார்வையிட மத்திய அரசு குழு அமைத்தது. தேசிய கூட்டுறவு மேம்பாட்டு வளர்ச்சி கழக நிர்வாக இயக்குனர் வசுதா மிஸ்ரா தலைமையில் மத்திய நிதி ஆணைய ஆலோசகர் தீனாநாத், மத்திய எரிசக்தித்துறை ஆணைய துணை இயக்குனர் சுமித்குமார் ஆகியோர் அடங்கிய மத்திய குழுவினர் நேற்று காலை விழுப்புரத்திற்கு வந்தனர்.
இந்த குழுவினர் காலை 11 மணியளவில் விழுப்புரம் அருகே பனையபுரத்தில் வறட்சியால் பாதிக்கப்பட்ட நெற் பயிர்களை பார்வையிட்டனர். அப்போது அந்த பகுதி விவசாயிகள், தண்ணீரின்றி கருகிய பயிர்களை மத்திய குழுவினரிடம் கண்ணீர்மல்க காண்பித்தனர்.
முற்றுகை
சுமார் 10 நிமிடங்களில் ஆய்வுப்பணியை முடித்துவிட்டு மத்திய குழுவினர் காரில் ஏறி புறப்பட தயாரானார்கள். இதை பார்த்த விவசாயிகள், வறட்சியால் பாதிக்கப்பட்ட தங்களிடம் குறைகள் எதுவும் கேட்காமல் பெயரளவில் ஆய்வு செய்துவிட்டு செல்வதா? எனக்கூறி திடீரென மத்திய குழுவினரின் காரை வழிமறித்து முற்றுகையிட்டனர்.
இதையடுத்து காரில் இருந்து கீழே இறங்கிய மத்திய குழுவினர், விவசாயிகளிடம் பேச்சுவார்த்தை நடத்தினார்கள். அப்போது வறட்சி பாதிக்கப்பட்ட இடங்களில் முறையாக ஆய்வு நடத்தி வருகிறோம். விரைவில் இதுகுறித்த அறிக்கையை மத்திய அரசுக்கு அனுப்பி உரிய நிவாரணம் கிடைக்க நடவடிக்கை எடுக்கப்படும் என தெரிவித்தனர். அதன் பிறகு விவசாயிகள் அனைவரும் கலைந்து சென்றதை தொடர்ந்து மத்திய குழுவினர் அங்கிருந்து புறப்பட்டுச்சென்றனர்.
இந்த சம்பவத்தால் அங்கு சிறிதுநேரம் பரபரப்பு ஏற்பட்டது. பின்னர் மத்திய குழுவினர் மயிலம் அருகே பேரணி கிராமத்திற்கு சென்று அங்கு வறட்சியால் பாதிக்கப்பட்ட பயிர்களை பார்வையிட்டு சேத விவரம் குறித்து அதிகாரிகளிடம் கேட்டறிந்தனர்.
அங்கும் கருகிய பயிர்களை விவசாயிகள் காண்பித்து, வறட்சியால் பாதிக்கப்பட்ட பயிர்களை முறையாக கணக்கெடுத்து நிவாரண தொகையை உடனடியாக அரசு வழங்க வேண்டும் என கண்ணீர்மல்க தெரிவித்தனர். மேலும் விவசாய பணிக்காக வங்கிகளில் வாங்கிய கடனையும் ரத்து செய்ய நடவடிக்கை எடுக்க வேண்டும் என மத்திய குழுவினரிடம் விவசாயிகள் முறையிட்டனர்.
இதையடுத்து பல்வேறு விவசாயிகள் வறட்சியால் ஏற்பட்ட பாதிப்புகள் குறித்து மத்திய குழுவினரிடம் மனு கொடுத்தனர்.
புகைப்படங்கள்
அதன் பிறகு அங்கிருந்து புறப்பட்ட மத்திய குழுவினர் திண்டிவனம் ஜக்காம்பேட்டையில் உள்ள பயணியர் சுற்றுலா மாளிகைக்கு சென்றனர்.
அங்கு, மாவட்டத்தின் பல்வேறு இடங்களில் வறட்சியால் பாதிக்கப்பட்ட விவசாய பயிர்கள் குறித்த புகைப்படங்கள் வைக்கப்பட்டிருந்தது. அதனை மத்திய குழுவினர் பார்வையிட்டனர்.
அப்போது அவர்கள், மாவட்டத்தில் மொத்தம் எத்தனை ஏக்கர் அளவில் பயிர்கள் சேதமடைந்துள்ளது என்ற விவரத்தை மாவட்ட கலெக்டரிடம் கேட்டறிந்தனர்.
இந்த ஆய்வின்போது தமிழ்நாடு வருவாய் நிர்வாக ஆணையர் சத்தியகோபால், விழுப்புரம் மாவட்ட கலெக்டர் எல்.சுப்பிரமணியன், மாவட்ட வருவாய் அலுவலர் ராஜசேகரன், வேளாண் இணை இயக்குனர் கார்த்திகேயன், திண்டிவனம் சப்-கலெக்டர் ஸ்ரீதர், விழுப்புரம் வருவாய் கோட்டாட்சியர் ஜீனத்பானு ஆகியோர் உடனிருந்தனர்.
மத்திய அரசுக்கு அறிக்கை
முன்னதாக பேரணி கிராமத்தில் தமிழ்நாடு வருவாய் நிர்வாக ஆணையர் சத்தியகோபால், நிருபர்களுக்கு பேட்டியளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-
தமிழகத்தில் வறட்சியால் பாதிக்கப்பட்ட பயிர்களை பார்வையிட 10 பேர் அடங்கிய மத்திய குழுவினர் வருகை தந்து தனித்தனி குழுக்களாக பிரிந்து சென்று அனைத்து மாவட்டங்களிலும் வறட்சியால் பாதிக்கப்பட்ட பயிர்களை பார்வையிட்டு ஆய்வு செய்து வருகின்றனர். ஐ.ஏ.எஸ். அதிகாரி வசுதா மிஸ்ரா தலைமையிலான குழுவினர் நேற்று (அதாவது நேற்று முன்தினம்) தஞ்சை, திருவாரூர், நாகை உள்ளிட்ட மாவட்டங்களில் ஆய்வு முடித்துவிட்டு இன்றைய தினம் (நேற்று) கடலூர் மாவட்டத்தில் ஆய்வு செய்தனர். அதன் பிறகு விழுப்புரம் மாவட்டத்தில் தண்ணீரின்றி கருகிய பயிர்களையும், வறட்சியால் பாதிக்கப்பட்ட இடங்களையும் சரியாக கணக்கெடுத்துள்ளனரா? எனவும் பார்வையிட்டனர். இந்த குழுவினரிடம் விழுப்புரம் மாவட்டத்தில் வறட்சியால் பாதிக்கப்பட்ட பயிர்களின் நிலைமை குறித்து மாவட்ட கலெக்டர் விரிவாக எடுத்துரைத்துள்ளார். இதனை தொகுத்து மத்திய அரசுக்கு ஒரு விவரமான அறிக்கையை இந்த குழுவினர் அனுப்புவார்கள். அதன் அடிப்படையில் உடனே மத்திய அரசு நிவாரணம் வழங்கும். மத்திய குழுவினரிடம் பயிர் பாதிப்பு அதிகமாக உள்ளது என விவசாயிகள் எடுத்துரைத்துள்ளனர். கணக்கெடுப்பு பணியில் தவறு நடக்க வாய்ப்பில்லை.
இவ்வாறு அவர் கூறினார்.
விழுப்புரம் மாவட்ட ஆய்வுப்பணியை முடித்துக்கொண்ட மத்திய குழுவினர் திண்டிவனத்தில் இருந்து காஞ்சீபுரம் மாவட்டத்துக்கு சென்றனர்.