செய்யாறு: அழுகிய நிலையில் பெண் பிணம், கொலையா? - போலீசார் விசாரணை

செய்யாறு புறவழிச் சாலையோரத்தில் அழுகிய நிலையில் பெண் பிணம் கிடந்தது. அவர் கொலை செய்யப்பட்டாரா? என்று போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
செய்யாறு: அழுகிய நிலையில் பெண் பிணம், கொலையா? - போலீசார் விசாரணை
Published on

செய்யாறு,

செய்யாறு புறவழிச் சாலையோரத்தில் அழுகிய நிலையில் பெண் பிணம் கிடந்த சம்பவம் குறித்து போலீஸ் தரப்பில் கூறப்படுவதாவது:-

செய்யாறு புறவழிச் சாலையோரத்தில் தனியார் பள்ளி அருகே பொதுமக்கள் நேற்று நடந்து சென்றனர். அப்போது அங்குள்ள நிலத்தில் இருந்து துர்நாற்றம் வீசியது. இதையடுத்து பொதுமக்கள் அங்கு சென்று பார்த்தபோது நிலத்தில் தேங்கி இருந்த தண்ணீரில் அழுகிய நிலையில் ஒரு பெண் பிணமாக கிடந்தார்.

இதுகுறித்து அவர்கள் செய்யாறு போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர். அதன்பேரில் இன்ஸ்பெக்டர் சுதாகர் சப்-இன்ஸ்பெக்டர் பிரபு மற்றும் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து பிணத்தை மீட்டு பிரேத பரிசோதனைக்காக செய்யாறு அரசு தலைமை மருத்துவ மனைக்கு அனுப்பி வைத்தனர்.

மேலும் போலீசார் நடத்திய விசாரணையில், இறந்தவர் செய்யாறு காமராஜர் நகரை சேர்ந்த காதர் என்பவரின் மனைவி முபீனா (வயது 30) என்பதும், கடந்த 4 நாட்களுக்கு முன்பு வீட்டை விட்டு வெளியில் சென்றவர் பின்னர் வீடு திரும்பவில்லை என்பதும் தெரிய வந்தது.

இதுகுறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து முபீனா தற்கொலை செய்து கொண்டாரா? அல்லது யாராவது கொலை செய்து அங்கு வீசி சென்றார்களா? என பல்வேறு கோணங்களில் விசாரணை நடத்தி வருகின்றனர்.

X

Daily Thanthi
www.dailythanthi.com